செய்திகள்
சாலையில் மெதுவாக செல்லும் வாகனங்கள்

கனமழையால் வெள்ளக்காடாக மாறியது சென்னை... வாகன ஓட்டிகள் கடும் அவதி

Published On 2020-12-04 04:07 GMT   |   Update On 2020-12-04 06:55 GMT
சென்னையில் இன்று அதிகாலை முதலே விட்டுவிட்டு பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
சென்னை:

புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டுகிறது. நேற்று இரவு வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. 

சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி நகர், கிண்டி, திருவான்மியூர், வண்ணாரப்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதால் மிக கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம்  , கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News