ஆன்மிகம்
கட்டளைகளை கடைபிடித்து வாழ வேண்டும்

கட்டளைகளை கடைபிடித்து வாழ வேண்டும்

Published On 2019-11-06 03:56 GMT   |   Update On 2019-11-06 03:56 GMT
இறைவனை வேதனைப்படுத்தும் பாவ வாழ்வை விட்டு விட்டு உண்மையாய், நேர்மையாய் கடவுளின் கட்டளைகளை ஏற்று இறைவனின் சாட்சியமக்களாய் வாழ்ந்திட முயற்சி எடுப்போம்.
இறைவனுக்கும் நமக்குமுள்ள உறவை சீர்தூக்கி பார்த்து சரியான விதத்தில் நம் வாழ்க்கை பயணம் செல்கிறதா? என ஆராய்ந்து செயல்பட இத்தவக்காலம் நமக்கு தரப்பட்டுள்ளது. எஞ்சி இருக்கின்ற இந்தவக்கால நாட்களில் ஒருமுறை நம்மை மீண்டும் சுய ஆய்வு செய்து கொள்வது மிகவும் நல்லது.

ஒரு மனிதனை உருவாக்குவது அவரது அனுபவங்களே. நல்ல அனுபவங்களை பெறும் போது நல்லவராக மாறுகின்றனர். தீய அனுபவங்களை பெறும் போது தீயவர்களாகவே மாறுகின்றனர். அனுபவமே வாழ்வை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட அனுபவங்கள் தான் நமக்கு பாடமாக அமைய வேண்டும். அப்படி இல்லையெனில் நமது வாழ்வு கேள்விகுறி ஆகிவிடும். லூக்கா 11:23-ல் இயேசு இவ்வாறு கூறுகிறார்.

என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார் என்றும், அவரது கட்டளைகளை கடைபிடிப்பதே நாம் அவரோடு இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். கட்டளைகளை கடைபிடிக்காமல் திருயாத்திரைகளோ, திருவிழாக்களோ அல்லது தவயாத்திரைகளோ சென்று, இத்தனை கோவில்களுக்கு சென்றேன். அத்தனை கோவில்களிலும் திருப்பலியில் பங்கெடுத்தேன் என்று சொல்வதில் என்ன பயன்? இயேசுவின் கட்டளைகளை கடைபிடித்து வராமல் நல்ல கிறிஸ்துவர்களாக வாழ்கிறோம் எனக்கூறி போலிதனமான வாழ்வு வாழ்வதால் கடவுளை ஏமாற்றிவிட முடியாது.

எரேமியா 7:23-ல் ஆண்டவர் கூறுகிறார். என் குரலுக்கு செவி கொடுங்கள் அப்போது நான் உங்களுக்கு கடவுளாய் இருப்பேன். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைபிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும் என்று கூறுகிறார்.

எனவே இத்தவக்காலத்தில் இறைவனை வேதனைப்படுத்தும் பாவ வாழ்வை விட்டு விட்டு உண்மையாய், நேர்மையாய் கடவுளின் கட்டளைகளை ஏற்று இறைவனின் சாட்சியமக்களாய் வாழ்ந்திட முயற்சி எடுப்போம். கடவுள் பிள்ளைகளாய் வாழ்வோம்.

அருட்தந்தை மரியசூசை, கும்பகோணம்.
Tags:    

Similar News