வழிபாடு
பந்தளத்தில் இருந்து திருவாபரண ஊர்வலம் புறப்பட்ட போது எடுத்த படம்.

திருவாபரண பெட்டி ஊர்வலம் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டது

Published On 2022-01-13 02:18 GMT   |   Update On 2022-01-13 05:35 GMT
மகரவிளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி ஊர்வலம் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டது.

திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஐயப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச்சென்றனர். முன்னதாக பந்தளம் கொட்டாரத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி திருவாபரண ஊர்வலத்துடன் பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி ஒருவர் செல்வது வழக்கம். அதன்படி மூலம் நாள் சங்கர் வர்மா திருவாபரண ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தி சென்றார். அவரை பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து தலைச்சுமையாக தூக்கி சென்றனர். இந்த ஊர்வலம் சாமி ஐயப்பனின் பாரம்பரிய பெருவழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நாளை மதியம் பம்பை கணபதி கோவிலை சென்றடையும்.

பின்னர் அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள் ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனைக்கு பிறகு மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
Tags:    

Similar News