லைஃப்ஸ்டைல்
பள்ளியை மேம்படுத்துவோம்

பள்ளியை மேம்படுத்துவோம்

Published On 2019-07-16 02:55 GMT   |   Update On 2019-07-16 02:55 GMT
மாணவர்களை மேம்படுத்துவதன் மூலம் பள்ளியும் மேம்படும். என்றாலும் மாணவர்களை மேம்படுத்த, பள்ளியில் அனைத்து வகையான கட்டமைப்புகளும், மேம்பட்ட சூழலும் உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
பள்ளிக்கூடம், பல்வேறு இடங்களில் இருந்து வரும் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் இடமாக உள்ளது. இதனால் அவர்கள் ஒவ்வொருவரின் பழக்கங்களும் வேறுபட்டதாக இருக்கிறது. ஆனாலும் மாணவர்கள் ஒன்று கூடி படித்து வருகின்றனர். இதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்து கொடுத்து வருகிறது.

மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களையும் வழங்கி வருகிறது. ஆனாலும் அரசு பள்ளிகளில் இன்னும் போதிய வசதிகளை செய்ய வேண்டிய நிலையே உள்ளது. எனவே தான் அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்விச்சீர் கொடுக்கும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. அதில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்று மேஜை, நாற்காலி, மின்விசிறி போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

இது போல் அரசு பள்ளியில் படித்து நல்ல நிலையில் இருக்கும் உதவும் மனம் படைத்தவர்களும், தாங்கள் படித்த பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும். குறிப்பாக குடிநீர், கழிப்பிட வசதி முழு அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏழை, எளிய அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்தவர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் தான் படிக்க வைக்கப்படு கின்றனர். அவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க ஆசிரியர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவும், அவர்கள் உயர்கல்வி பெறவும் ஊக்கம் அளிக்க வேண்டும்.

பாடங்கள் நடத்துவது தவிர சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை, வன வளம், சேமிப்பு, சிக்கனம், பேரிடர் மேலாண்மை, அரசு அலுவலக நடைமுறை, விண்ணப்பம் நிரப்புதல் மற்றும் நாட்டின் ஜனநாயக முறைகளும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக உருவாகும் நிலை ஏற்படும்.

அரசு பள்ளிகளில் மைதானம், ஆய்வகம், நூலகம் போன்றவை மேம்படுத்தப்பட வேண்டும். அது மாணவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலுவோடு இருக்க உதவும். பள்ளிக்கூடத்தின் பெருமை என்பது அங்கிருக்கும் வசதிகளை மட்டும் கொண்டது இல்லை. மாறாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் செய்யும் சாதனையில் தான் அடங்கி இருக்கிறது. எனவே பள்ளிக்கு பெருமை சேர்க்க கூடிய வகையில் மாணவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும். அது தான் அரசு பள்ளி குறித்த பொதுமக்களின் மனநிலையை மாற்றும் சக்தி கொண்டது.

பள்ளியின் கருவூலமாக இருக்க கூடியவர்கள் மாணவ -மாணவிகள் தான். அவர்களின் திறமை வளர்க்கப்பட வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்க வேண்டும். தேர்வு முறை சார்ந்து மட்டுமின்றி சமூகசூழல் சார்ந்த சிந்தனையும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

நம்மை சுற்றி உள்ள குறைகளை பற்றி கவலை கொள்ளக்கூடாது. மாறாக நம்மிடம் இருக்கும் நிறைகளை வைத்து எப்படி முன்னேறுவது என்பதை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நேர்மறை சிந்தனை மூலமே வெற்றியை ஈட்ட முடியும். எல்லா இடங்களில் நிறை, குறைகள் கலந்து தான் இருக்கின்றன. அதில் நம்முடைய தேர்வு எது என்பதில் தான் நம்முடைய வெற்றியும் அடங்கி இருக்கிறது. எனவே மாணவர்களை மேம்படுத்துவதன் மூலம் பள்ளியும் மேம்படும். என்றாலும் மாணவர்களை மேம்படுத்த, பள்ளியில் அனைத்து வகையான கட்டமைப்புகளும், மேம்பட்ட சூழலும் உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

மணிபாரதி, பி.எஸ்.சி.முதலாம் ஆண்டு, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கோவை.
Tags:    

Similar News