செய்திகள்
கோப்புபடம்

கேரளாவில் தேர்தல் நேரத்தில் சிக்கிய ரூ.3.50 கோடி பணம் கொள்ளை - பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை

Published On 2021-06-06 11:23 GMT   |   Update On 2021-06-06 11:23 GMT
கேரளாவில் தேர்தல் நேரத்தில் சிக்கிய ரூ.3.50 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் சுரேஷ் கோபி பாரதிய ஜனதா மாநில நிர்வாகிகளிடம் திருச்சூர் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி திருச்சூர்- எர்ணாகுளம் சாலையில் ஒரு வாகன விபத்து நடந்தது.

இந்த விபத்து குறித்து தர்மஜன் என்பவர் திருச்சூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் விபத்துக்குள்ளான காரில் ரூ.25 லட்சம் பணம் இருந்ததாகவும், அதனை விபத்து ஏற்படுத்திய கும்பல் கொள்ளை அடித்து சென்றுவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சம்சீர் என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

விபத்து நடந்த காரில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாகவும், அதனை கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்ததை தெரிந்து கொண்ட கும்பல் தான் அந்த பணத்தை கொள்ளை அடித்து சென்றதும் தெரியவந்தது.

கேரளாவில் தேர்தல் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு பணம் கொள்ளைஅடிக்கப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவி ஏற்றதும் இந்த விசாரணை மீண்டும் சூடுபிடித்தது. இதில் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் செலவுக்காக கொண்டு வரப்பட்ட பணத்தை ஒரு கும்பல் திட்டமிட்டு கொள்ளை அடித்து சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.அந்த பணம் ரூ.3.50 கோடிக்கு மேல் இருக்கும் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

எனவே இக்கொள்ளையில் பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கு தொடர்பு இருக்கும் என்று சந்தேகப்பட்ட போலீசார் இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுரேந்திரனின் உதவியாளர் மற்றும் டிரைவரிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

இதிலும் பல முக்கிய தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது. அதன்அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபிக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கும் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவரது அலுவலகத்திற்கு இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் வந்து சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே நடிகர் சுரேஷ் கோபியிடமும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். இன்று அல்லது நாளை அவரிடம் போலீசார் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News