செய்திகள்
சென்னை மாநகராட்சி

கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத அதிக கூட்டம் உள்ள கடைகளுக்கு சீல் - சென்னை மாநகராட்சி

Published On 2021-07-16 08:57 GMT   |   Update On 2021-07-16 10:31 GMT
அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கடைகளும் பொதுமக்களும் செயல்படுவதால், நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

ஜவுளி, நகை கடைகள் மற்றும் வணிக வளாகங்கள், அனைத்து தொழில் நிறுவனங்கள் முழுமையாக தற்போது செயல்படுவதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கடைகளும் பொதுமக்களும் செயல்படுவதால், நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இதனால் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகள், தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தொடங்கி உள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 3 கடைகள் நேற்று சீல் வைக்கப்பட்டன. வால்ஸ் ரோட்டில் உள்ள 2 கடைகள், மீரான் சாகிப் தெருவில் உள்ள ஒரு கடையை மூடி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


இந்த நடவடிக்கை மேலும் தொடர்கிறது. வணிக மையமாக திகழும் தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பெரம்பூர், வேளச்சேரி, அண்ணாநகர், வடபழனி உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் நெரிசலை குறைக்க வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமி‌ஷனர் ககன்சிங் பேடி கூறியதாவது:-

கொரோனா தொற்று முழுமையாக குறையவில்லை. தொற்று பரவல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வெளியே செல்ல வேண்டும். அவசியம் இருந்தால் மட்டும் வெளியே செல்வது நல்லது. தேவையில்லாமல் சுற்றி திரிவதால் நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

கூட்ட நெரிசலால் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

சனி, ஞாயிற்றுக்கிழமைளில் வெளியில் செல்வதை குறைத்து கொள்ள வேண்டும். கடை, தொழில் நிறுவனம் நடத்துபவர்கள் 50 சதவீத பார்வையாளர்களை மட்டும் ஒரு நேரத்தில் அனுமதிக்க வேண்டும். அவர்கள் வெளியே சென்ற பிறகு மற்றவர்களை விட வேண்டும். அப்போதுதான் நோய் தொற்று பரவாது.

கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் இஷ்டத்துக்கு அனுமதித்தால் அந்த கடைகளை மூடி சீல் வைக்கப்படும். மாநகராட்சி அதிகாரிகள் வணிக பகுதிகளில் இதனை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

அதனால் மிகுந்த எச்சரிக்கையோடு வியாபாரிகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்...மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.133 கோடி நிதியை முழுமையாக வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

Tags:    

Similar News