செய்திகள்

மக்கள் விரோத போக்கிற்கு முடிவு கட்ட காங்.- திமுக கூட்டணியை தேர்வு செய்யுங்கள்: கே.எஸ்.அழகிரி

Published On 2019-04-15 07:22 GMT   |   Update On 2019-04-15 07:51 GMT
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கிற்கு முடிவு கட்ட காங்கிரஸ்- திமுக கூட்டணியை தேர்வு செய்யுமாறு வாக்காளர்களை கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார். #LokSabhaElections2019 #Congress #KSAlagiri
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய மோடி இதுவரை கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றியதில்லை. இந்த நிலையில் தான் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஜூன் 2018 நிலவரப்படி 4.27 கோடி பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ரெயில்வே துறையில் 90 ஆயிரம் கேங் மேன், ஸ்விட்ச்மேன் போன்ற வேலைகளுக்கு 2 கோடியே 80 லட்சம் பேர் மனு செய்திருக்கிறார்கள். மத்திய அரசில் 18 பியூன் வேலைக்கு 12,453 பேர் மனு செய்திருக்கிறார்கள். இதில் 129 பொறியியல் பட்டதாரிகள், 23 சட்டம் படித்தவர்கள், 323 சட்ட மேற்படிப்பு படித்தவர்கள் அடங்குவர். தகுதியானவர்கள், தகுதிக்கு குறைவான வேலைக்கு மனு செய்ய வேண்டிய அவலநிலைக்கு யார் பொறுப்பு?

விவசாயிகளின் விளை பொருளுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவாகவே சந்தையில் விற்கப்படுகிறது. அதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு, கடன்சுமை அதிகரித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்தார். இதனால் கருப்புப் பணமோ, கள்ளப் பணமோ, பயங்கரவாதமோ ஒழிந்ததாக தெரியவில்லை. செல்லாது என அறிவிக்கப்பட்ட மொத்த தொகையில் 99 சதவீதம் வங்கிகளுக்கு திரும்ப வந்து விட்டது. ரூபாய் 4 லட்சம் முதல் 5 லட்சம் கோடி வரை கருப்பு பணம் இருப்பதாக கருதியே மோடி இதை அறிவித்தார். ஆனால் அறிவிப்பினால் எந்த பலனும் ஏற்படவில்லை. அப்பாவி மக்கள் 140 பேர் உயிரை இழந்தனர். 35 லட்சம் வேலைகள் பறிபோயின. ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் மூடப்பட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூபாய் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

90 ஆயிரம் கோடி அளவிற்கு வங்கிகளில் மோசடி நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சி பதவி விலகிய போது 2014 இல் வாராக்கடன் ரூபாய் 2 லட்சத்து 83 ஆயிரம் கோடி. ஆனால் ஜனவரி 2019 இல் மோடி ஆட்சியில் வாராக் கடன் ரூபாய் 13 லட்சம் கோடி.


பா.ஜ.க. ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.

பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் முதன்மை இடத்தில் இருப்பது ரபேல் விமான கொள்முதல் ஊழல். காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எவரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பேரம் பேசியதன் விளைவாக வாங்கப்பட்ட விமானத்தின் விலை ரூ.1670 கோடி. மூன்று மடங்கு விலை உயர்வினால் அரசுக்கு இழப்பு ரூ.41 ஆயிரம் கோடி. பாராளுமன்றம், நீதித்துறை, அமைச்சரவை, மத்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத்துறை, தேர்தல் ஆணையம், மத்திய கண்காணிப்பு ஆணையம் ஆகிய அமைப்புகள் மோடியின் எதேச்சதிகார நடவடிக்கையினால் தன்னாட்சி உரிமையை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடர்கிறது. தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. வன்முறையினால் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களிடையே பாதுகாப்பற்ற தன்மை அதிகரித்துள்ளது. மதக்கலவரங்களினால் பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்கால நலனுக்கு உலை வைக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வை திணித்தது.

மத்திய -மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கிற்கு முடிவுகட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டுமென்று முன்மொழிந்திருக்கிறார். அதேபோல, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டுமென்ற விருப்பத்தை ராகுல் காந்தி வெளியிட்டிருக்கிறார். இதனடிப்படையில் தமிழக வாக்காளர்கள் வாக்களித்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Congress #KSAlagiri
Tags:    

Similar News