செய்திகள்
கொரோனா வைரஸ்

திருமங்கலத்தில் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து 13 பேர் பலி

Published On 2021-05-17 11:07 GMT   |   Update On 2021-05-17 11:07 GMT
கொரோனா தொற்று உள்ளவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள், நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்பு அதிகளவில் இருக்கிறது.
திருமங்கலம்:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும் பொதுமக்கள் நடமாட்டத்தால் கொரோனா சமூக பரவலாக மாறி வருகிறது. திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிக அளவு உள்ளது.

திருமங்கலம் நகர் பகுதியில் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் காய்கறிகள், பழங்கள் வாங்க கூட்டம் கூடுவதால் அரசு நிர்ணயித்த காலை 10 மணியை தாண்டியும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உள்ள 100 படுக்கைகளில் 83 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொரோனா தொற்று உள்ளவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள், நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்பு அதிகளவில் இருக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிரிழப்பு அதிக அளவில் இருக்கும்.

எனவே திருமங்கலம் அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் உயிரிழப்பை தடுக்க முடியும் என்றனர்.

Tags:    

Similar News