ஆன்மிகம்
உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்ததையும், கொடியேற்றும் நிகழ்ச்சியையும் படங்களில் காணலாம்

நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-04-27 07:00 GMT   |   Update On 2021-04-27 07:00 GMT
நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்தில் வேதவல்லி சமேத வேதநாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடக்கிறது. நேற்று காலை உற்சவர்களான வேதவல்லி சமேத வேதநாராயணசாமிைய திருச்சி வாகனத்தில் வைத்து கோவிலை வலம் வந்து கொடிமரத்துக்கு அருகில் வைத்தனர்.

காலை 9.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை மிதுன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றம் நடந்தது. முன்னதாக மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடியை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. விழாவில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து விழாவின் 2-வதுநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, நாளை (புதன்கிழமை) காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 29-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 30-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு கருட வாகன (கருடசேவை) வீதிஉலா.

அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 3-ந்தேதி காலை தேரோட்டம் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவுவதால், அதற்கு பதிலாக சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது. பின்னர் மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணிவரை சாமி, அம்பாள் திருக்கல்யாண உற்சவம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 4-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் வேதநாராயணசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தனித்தும், உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி தினமும் காலை 8 மணியில் இருந்து காலை மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
Tags:    

Similar News