செய்திகள்
விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேசியபோது எடுத்த படம்.

அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்தால் வழக்கு - துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

Published On 2021-09-12 18:03 GMT   |   Update On 2021-09-12 18:03 GMT
தர்மபுரி நகரில் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி:

தர்மபுரி நகரில் விளம்பர ரீதியாக வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சித்ரா வரவேற்று பேசினார். தாசில்தார் ராஜராஜன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை கலந்துகொண்டு பேசியதாவது:-

விளம்பர ரீதியான டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பதாகைகள் வைப்பதற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தர்மபுரி பகுதியில் நடைபெறும் திருவிழாக்கள், பண்டிகைகள், திருமண விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர ரீதியாக வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் உரிய அனுமதி பெற்ற பின்னரே வைக்க வேண்டும். இந்த விளம்பர பேனர்கள் வைப்பதற்கு கலெக்டரிடம் 15 நாட்களுக்கு முன்பு உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும். பேனர் வைக்கும் இடத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் போலீஸ் துறையிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும்.

பேனர்களை வைப்பதற்கு அதற்கான தொகையை கருவூலத்தில் செலுத்தி அந்த ரசீதை இணைத்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர்கள் வைத்தால் காவல் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையோரத்தில் மஞ்சள் கலரில் கயிறு கட்டி அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த எல்லைக்குள் வாகனங்களை நிறுத்தி எடுத்து செல்ல வேண்டும். அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க தலைவர் வைத்தியலிங்கம், செயலாளர் கிரிதர், பொருளாளர் ஆண்டாள் ரவி, ஜவுளிக்கடை உரிமையாளர் சங்க செயலாளர் நடராஜன், ரெயில் பணிகள் நல சங்க நிர்வாகி பிரதீப் குமார் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News