செய்திகள்
முற்றுகையிட்ட நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களை படத்தில் காணலாம்.

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை சாலை பணியாளர்கள் முற்றுகை

Published On 2021-09-08 10:47 GMT   |   Update On 2021-09-08 10:47 GMT
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை சாலை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்லசாமி தலைமையில், அச்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

இறந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களை திறன்மிகு இல்லா ஊழியர்களாக அறிவித்து தர ஊதியம் ஆயிரத்து 900 ரூபாய் என மாற்றி புதிய ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவை தொகை வழங்கிட வேண்டும். சீருடை சலவைப்படி, விபத்து படி, சைக்கிள் படி வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்.

வேப்பந்தட்டை, குன்னம் உட்கோட்டத்தில் பணிபுரியும் சாலை பணியாளர்களின் வீட்டு வாடகைப்படியை ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களில் சிலரை கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். அவர்கள் சாலை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுவினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கொடுத்தனர்.
Tags:    

Similar News