செய்திகள்
குன்னூர் அருகே சந்தனமரங்கள் வெட்டப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

குன்னூர் பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் - வனத்துறை அதிகாரிகள் விசாரணை

Published On 2021-07-24 15:12 GMT   |   Update On 2021-07-24 15:12 GMT
குன்னூர் பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊட்டி:

குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தனியார் நிலத்தில் ஈட்டி, தேக்கு, அயின், நாவல், சந்தனம் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன. இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தக்கடை பகுதியில் வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான சந்தன மரங்கள் முள்வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே அந்த சந்தன மரங்களை மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்தி உள்ளனர்.

இதில் தனியாருக்கு சொந்தமான 4 மரங்களும், வனத்துறைக்கு சொந்தமான 2 மரங்கள் என்று 6 மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது. வெட்டப்பட்ட மரங்களின் அடிப்பகுதியில் வனத்துறை சார்பில் குறியீடும் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சந்தன மரங்களை வெட்டி கடத்திய மர்ம ஆசாமிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தனியார் தோட்ட உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் கொலக்கொம்பை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.

எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News