உள்ளூர் செய்திகள்
திமுக

தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வில் வார்டு நிர்வாகிகள் தேர்தல்

Published On 2022-04-17 04:45 GMT   |   Update On 2022-04-17 04:45 GMT
சென்னை மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் மாவட்ட கழகம் அறிவிக்கும் இடங்களில் வேட்பு மனுவை அளிக்கலாம். தற்போது நடைபெறும் தேர்தலில் வட்டச்செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது. தற்போது வார்டு நிர்வாகிகள் பதவிகளுக்கு வேட்புமனு வழங்கப்பட்டு வருகிறது. இதில் வட்டச்செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தலை நடத்த தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக பேரூர், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக தேர்தல் ஏப்ரல் 28-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மாவட்ட கழகத்திலோ அல்லது ஒன்றிய நகர கழகத்திலோ வேட்புமனுவுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து வருகிற 22, 23 ஆகிய தேதிக்குள் தலைமைக் கழக பிரதிநிதிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு பதவிக்கும் போட்டி இருந்தால் 28-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

இதேபோல் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக தேர்தல் மே 1-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டி உள்ளதால் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 29-ந்தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தலைமை கழக பிரதிநிதிகளிடம் வழங்க வேண்டும்.

சென்னை மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் மாவட்ட கழகம் அறிவிக்கும் இடங்களில் வேட்பு மனுவை அளிக்கலாம். தற்போது நடைபெறும் தேர்தலில் வட்டச்செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்த பதவி கட்சியில் அதிகாரம் உள்ள பதவி என்பதால் அதை கைப்பற்ற கட்சி நிர்வாகிகளிடையே கடும் போட்டி உள்ளது. போட்டியை தவிர்க்க பல இடங்களில் சமரச பேச்சு வார்த்தை மூலம் பதவியை பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள்... 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆயிரத்தை தாண்டியது- கொரோனா புதிய பாதிப்பு 1,150 ஆக உயர்வு

Tags:    

Similar News