செய்திகள்
மேட்டூர் அணை நிரம்பி வரும் காட்சி.

மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்புகிறது

Published On 2019-10-22 04:13 GMT   |   Update On 2019-10-22 04:13 GMT
மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இந்த வார இறுதிக்குள் 3-வது முறையாக 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர்:

கர்நாடக மற்றும் கேரளாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஆகஸ்டு மாத இறுதியில் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது.

இதனால் அந்த அணைகளில் இருந்து சுமார் 3 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் இந்த ஆண்டு முதல் முறையாக செப்டம்பர் மாதம் 7- தேதி மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர் 2-வது முறையாக 24-ந்தேதி மேட்டூர் அணை நிரம்பியது.

இதையடுத்து மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த 16-ந் தேதி நீர்வரத்து 6 ஆயிரத்து 594 கன அடியாக சரிந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 113.06 அடியாக இருந்தது.

மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 18-ந் தேதி 34 ஆயிரத்து 722 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இதனால் மீண்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர ஆரம்பித்தது.

நேற்று 16 ஆயிரத்து 224 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் 16 ஆயிரத்து 229 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று காலை காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

இதேபோல கால்வாய் பாசனத்திற்கும் 350 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து மிகக்குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று 117.80 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 118.60 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் முக்கால் அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று பிற்பகலில் 119 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் ஒரு அடியே குறைவாக உள்ளது.

இனி வரும் நாட்களில் இதே அளவு தண்ணீர் வந்தாலும் கூட மேட்டூர் அணை இந்த வார இறுதிக்குள் 3-வது முறையாக 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News