செய்திகள்
எச் ராஜா

ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது - அமைச்சர் சேகர் பாபுக்கு எச். ராஜா புகழாரம்

Published On 2021-07-24 09:53 GMT   |   Update On 2021-07-24 10:17 GMT
விவசாயிகளை திருடன் என்று கூறிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை முதல்வர் ஸ்டாலின், அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என எச் ராஜா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யநாதபுரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் அப்போதைய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது போலீசார் மற்றும் நீதிமன்றம் பற்றி விமர்சித்து பேசியதாக எச்.ராஜா உள்பட 18 பேர் மீது திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் எச்.ராஜா தரப்பில் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை நீதிபதிகள் விசாரித்து, மனுதாரர் திருமயம் கோர்ட்டில் 23-ந் தேதி ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி நேற்று காலை திருமயம் நீதிமன்றத்தில் நீதிபதி இந்திராகாந்தி முன்னிலையில் ஆஜரானார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரும் ஆஜராகினர்.

இந்த வழக்கை நீதிபதி செப்டம்பர் மாதம் 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த எச்.ராஜா, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, இந்து சமுதாயத்த இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

விவசாயிகளை திருடன் என்று கூறிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை முதல்வர் ஸ்டாலின், அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.

தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளன. இவற்றை ஆக்ரமிப்பாளரிடம் இருந்து மீட்கும் நடவடிக்கையை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விரைவாக செய்து வருவது பாராட்டுக்குரியது. கோவில் நில ஆக்கிரமிப்பு பட்டியலை என்னிடம் அமைச்சர் கேட்டுள்ளார்.


திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் அறநிலையத்துறையின் கோவில் இடங்களை வாங்கி சிலர் திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டி வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள், கடைகளை மீட்டால் ஆயிரம் கோவில்களில் புனரமைப்பு பணிகளை செய்யலாம்.

வன்முறைவாதி ஸ்டேன் சாமி, உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தியதுக்கு முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

இதையும் படியுங்கள்...சென்னையில் பெண்கள், குழந்தைகளுக்கான உதவி மையம் -காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

Tags:    

Similar News