செய்திகள்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ள புதிய கருவியை படத்தில் காணலாம்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய கருவி - சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது

Published On 2020-08-03 23:22 GMT   |   Update On 2020-08-03 23:22 GMT
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதிய கருவியை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
சென்னை:

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று எளிதாக பரவுகிறது. இதனால் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள், செவிலியர்கள் முழு உடல் கவச உடை அணிந்து சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக இருந்தபோதிலும் கொரோனா வார்டுகளில் பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதை கருத்தில் கொண்டு கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சையில் இருப்பவர்களிடம் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதை தவிர்க்க சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வரும் உடல் ஆரோக்கியம் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் மையம் (எச்.டி.ஐ.சி.), ஆரோக்கியம் தொடர்பாக ஐ.ஐ.டி. நடத்தி வரும் புத்தொழில் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் ஹெலிக்சன் நிறுவனம் ஆகியவை புதிய கருவியை கண்டுபிடித்து உள்ளது.

இந்த கருவியை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விரலில் பொருத்தினால் போதும். அந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ள ‘ரிமோட்’ சென்சார் மூலம் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு, சுவாசம் போன்ற முக்கியமான அளவீடுகளை மற்றொரு அறையில் இருந்து செல்போன் மூலமாகவோ அல்லது மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டு மையத்தின் மூலமோ துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

இந்த கருவி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு பொருத்திய கருவியை மற்றொரு நோயாளிக்கும் பொருத்தி கொள்ளலாம். புதிய கருவியை ஓராண்டு வரை பயன்படுத்தலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல தெற்கு ரெயில்வேயின், சிக்னல் மற்றும் தொலை தொடர்பு துறையின் சார்பில் கொரோனா நோயாளிகளை தொடாமல் அவர்களுக்கு தேவையான மருந்துகள், உணவு, தண்ணீர் வழங்க ‘ரெயில் மித்ரா’ என்ற ரோபோ வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோ நோயாளிகளை தொடாமலேயே அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ளும் தன்மை கொண்டது.

மேலும் இந்த ரோபோவில் உள்ள கேமரா மூலம் கொரோனா நோயாளிகளுடன் பேச முடியும். மேலும் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய தண்ணீர் பாட்டில்கள், முககவசங்களை எடுத்து சென்று அப்புறப்படுத்தும் வசதியும் உள்ளது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News