செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள்

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே வழங்குங்கள்... பாராளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-17 10:40 GMT   |   Update On 2020-09-17 10:40 GMT
ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுடெல்லி:

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கவில்லை என பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக கூட்டாக ஆலோசனை மேற்கொண்டு தீர்மானமும் நிறைவேற்றினர். 

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி ஆகியோருக்கு கடிதமும் எழுதினர். பாராளுமன்ற கூட்டம் தொடங்கியபிறகும் எதிர்கட்சியினர் இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.


இந்நிலையில், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு வழங்க வலியுறுத்தி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று கூட்டாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி மற்றும் சிவ சேனா ஆகிய கட்சிகளின் எம்பிக்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் திமுக சார்பில் டிஆர் பாலு, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதி மாறன், ஆர்எஸ் பாரதி போன்ற மூத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஜிஎஸ்டி நிலுவையை வழங்கக் கோரி அந்தந்த மாநில மொழிகளில் வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியதுடன், அவரவர் மாநில மொழிகளில் முழக்கமிட்டனர்.
Tags:    

Similar News