செய்திகள்
காந்தி சிலையை திறந்து வைத்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

கிரீஸ் நாட்டில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

Published On 2021-06-26 21:50 GMT   |   Update On 2021-06-26 21:50 GMT
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டுக்கு இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஏதென்ஸ்:

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக கிரீஸ் நாடு சென்றுள்ளார். நேற்று விமானம் மூலம் கிரீஸ் சென்றடைந்த அவர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி நிகோஸ் டெண்டியாஸை சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெய்சங்கர் - நிகோஸ் டெண்டியாஸ் இடையில் நடந்த சந்திப்பில், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினர். வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம், கல்வி மற்றும் மக்கள் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். இரு தரப்பு பிராந்தியங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், உலக அளவில் நிலவும் சிக்கலான பிரச்னைகள் குறித்தும் கலந்துரையாடினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிகோஸ் டெண்டியாஸ் இருவரும் திறந்து வைத்தனர்.

இதுதொடர்பாக , தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், மகாத்மா காந்தியின் போதனைகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News