செய்திகள்
வெள்ளத்தில் சிக்கிய ஆதிவாசி மக்களை கூடலூர் தீயணைப்பு படையினர் கயிறு மூலம் மீட்ட போது எடுத்த படம்.

கூடலூரில் ஒரே நாளில் 20 செ.மீ மழை - ஆதிவாசி கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது

Published On 2020-08-05 15:52 GMT   |   Update On 2020-08-05 15:52 GMT
கூடலூரில் ஒரே நாளில் 20 செ.மீ. மழை பெய்தது. இதனால் ஆதிவாசி கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் வெள்ளத்தில் சிக்கிய 25 பேரை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அப்பர்பவானியில் 308 மி.மீட்டரும், அவலாஞ்சியில் 220 மி.மீட்டரும் மழை பெய்தது. ஆனால் மக்கள் வசிக்கும் பகுதியான கூடலூரில் ஒரே நாளில் 201 மி.மீட்டர் (20 செ.மீ) மழை பெய்தது. இதனால் பாண்டியாறு, மாயார் உள்பட அனைத்து ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

நேற்று காலை 5 மணிக்கு கூடலூர் புரமணவயல் ஆதிவாசி கிராமம் வழியாக செல்லும் ஆற்றுவாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அப்போது திடீரென வாய்க்கால் கரை உடைந்து ஆதிவாசி கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இதை கண்ட ஆதிவாசி மக்கள் தங்களது குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். ஆனால் ஆற்றின் மறுபக்கம் வசித்து வந்த ஆதிவாசி மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் நீரின் வரத்து அதிகமாகி கொண்டிருந்தது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. ராஜகுமார், தாசில்தார் தினேஷ், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கத்துரை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படை வீரர்கள் கயிறு கட்டி ஆற்றில் மறுபக்கத்தில் வெள்ளத்தில் சிக்கிய ஆதிவாசி குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 25 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 103 ஆதிவாசி மக்கள் அத்திப்பாளி அரசு பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல் கூடலூர் புத்தூர்வயல் அருகே தேன்வயல் ஆதிவாசி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ஆதிவாசி மக்கள் பலர் வெளியேறி புத்தூர்வயல் அரசு பள்ளிக்கூடத்தில் வந்து தங்கினர். மொத்தம் 175 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News