லைஃப்ஸ்டைல்
உணவு முறை

இரத்த சோகைக்கு காரணமும்- உணவு முறையும்

Published On 2019-10-06 06:06 GMT   |   Update On 2019-10-06 06:06 GMT
மனிதர்களுக்கு ஏற்படும் இரத்த சோகைக்கு காரணம் குறித்தும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள் குறித்தும் காண்போம்.

நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சரியாக இயங்கி தத்தம் வேலைகளை செய்வதற்கு காற்றில் உள்ள ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அந்த ஆக்சிஜனை உடல் உறுப்புகளுக்கு கொண்டு சேர்ப்பது எது? நம் உடலில் ஓடும் ரத்தம். உடலில் ரத்தத்தின் அளவு குறைந்தால் உடலியல் வேலைகளில் தொய்வு ஏற்படுகிறது. இந்த ரத்தத்தின் குறைபாட்டையே “இரத்த சோகை” என்று சொல்கிறோம்.

நம் நாட்டில் சராசரியாக 50% மக்கள் ஆண், பெண், பெரியவர்கள், குழந்தைகள் என பாகுபாடின்றி ரத்தசோகையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

“ரத்த சோகை” அறிகுறிகள் என்ன?

குழந்தைகள் சோர்ந்து காணப்படுவது, எதிலும் நாட்டமில்லாமல் இருப்பது, படிப்பில் கவனக்குறைப்பாடு, சிறிய வேலை செய்தாலே அதிகமாக மூச்சிரைத்தல், அடிக்கடி தலை வலி, தலை சுற்றல், ஸ்பூன் போன்று வளைந்திருக்கும் நகங்கள், தலை முடிஉதிர்தல் ஆகியவை உடலில் ரத்தத்தின் குறைப்பாட்டினை காட்டுகிறது.

“ஓடி விளையாடு பாப்பா” என்று கூறினாலும், இரத்த சோகை உள்ள குழந்தைகளால் ஓடி விளையாட முடியாதப்படி எளிதில் களைப்பு வந்து சேரும். இதனாலேயே நம் நாட்டின் பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் எளிதில் வெற்றிபெற முடியாமல் போகிறது. பொதுவான வேலைத்திறனும் குறைகிறது.



இந்த பிரச்சினைக்கு என்ன காரணம்?

இதை இரண்டு வகையாக பார்க்கலாம். சத்துக்குறைபாடினால் வருவது, சத்துகுறைபாடில்லாத மற்ற காரணங்களால் வருவது. சத்துக்குறைபாடினால் வரும் ரத்தசோகையினைக் குறித்து அறிந்துக்கொள்வோம்.

நமது இரத்த சிவப்பு அணுக்களில் “ஹீமொக்ளோபின்” என்னும் வேதிப்பொருள் உள்ளது. “ஹீம்” என்பது இரும்பு, “குளோபின்” என்பது புரதம். எனவே இரும்புச்சத்தும் புரதச்சத்தும் இணைந்து உருவானதுதான் இந்த ரத்த அணுக்கள். இவற்றைத்தவிர, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 போன்ற வைட்டமின் சத்துக்களும் இணைந்திருக்கிறது. இந்த சத்துக்களில் எவை குறைந்தாலும் இரத்த அணுக்கள் குறைந்து ரத்த சோகை உண்டாகிறது.

சுற்றுபுற சுகாதாரமின்மையினால் ஏற்படும் கொக்கிப்புழுத் தொற்று, உடலில் இருக்கும் இரும்பு சத்தை உறிஞ்சி எடுப்பதால் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டு அதன் மூலமும் ரத்த சோகை ஏற்படுகிறது. சுற்றுபுறத்தைத் தூய்மையாக வைப்பதும், தன் சுத்தமும் சுகாதாரமும் பேணிக்காத்தால் கொக்கிப்புழு தொற்றைத்தவிர்க்கலாம். அதன்மூலம் ஏற்படும் இரும்புச்சத்துக் குறைபாடையும் ரத்த சோகையையும் தவிர்க்கலாம்.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி ஆண்களுக்கு 13.5 &- 17.5 கிராம்/100 மிலி, பெண்களுக்கு 12.5 & 14 கிராம்/100 மிலி, சிவப்பு ரத்த அணுக்கள் இருக்கவேண்டும். இந்த அளவில் குறைபாடு ஏற்படும்போதுதான் சோர்வு, தூக்கம், ஈடுபாடின்மை போன்றவை உண்டாகிறது.

இந்த ரத்த அணுக்களின் அளவை பாதுகாப்பதில் ஒவ்வொருவரின் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் புரதச்சத்து, இரும்பு சத்து, பி வைட்டமின்கள் நிறைந்து இருந்தால் ரத்த சோகையினை எளிதில் தவிர்க்கலாம்.

புரதச்சத்து அளிக்கக்கூடிய உணவுகள் எவை?

இதனை சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளாக பிரிக்கலாம். நாம் உண்ணும் பருப்பு வகைகள், பயறு, கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவைகளில் அதிகமான புரதச்சத்து அடங்கியுள்ளது, வேர்க்கடலை ஒரு நல்ல உதாரணம். இவைத்தவிர பால், தயிர், சீஸ், பாலாடைக்கட்டியும் புரதம் நிறைந்தது.

அசைவ உணவுகளான மீன், முட்டை, ஆட்டீரல், கறி வகைகளில் புரதமும், இரும்பு சத்தும் அதிகமாக உள்ளது. ஆனால், இவற்றை அளவிற்கு அதிகமாக உண்டால் தேவையில்லாத கொழுப்பு வந்து சேர்க்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது. ஒவ்வொருவரின் எடையை பொருத்து, அன்றாடம் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் புரதம் என நிர்ணயிக்கப்படும். அதாவது, 70 கிலோ எடை இருந்தால் 70 கிராம் புரதம் தேவைப்படும் என்பது பொருள்.

நமது நாட்டில் பெரும்பாலும் இரும்புச்சத்து குறைப்பாட்டினால் உண்டாகும் ரத்த சோகையே அதிகமாகக் காணப்படுகிறது. எனவே நமது உணவில் இரும்புச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சேர்க்கவேண்டும்..

ஒரு நாளைக்கு ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் இரும்பு, போலிக் சத்தின் அளவு:

வைட்டமின் பி12 சத்து ஒரு மைக்ரோகிராம் அளவிற்கு தேவைப்படுகிறது. இது மிகச்சிறிய அளவு. இதனை சரிவிகித உணவு சாப்பிடுவதன் மூலம் எளிதில் பெறலாம். எளிமையான உணவுகள் என்னென்ன, அதில் எவ்வளவு இரும்பு சத்து இருக்கிறது என்று இந்திய மருத்துவக்கழகம் அளித்துள்ள பட்டியலில் பார்ப்போம்: ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு குடும்பத்தில் அவரவர் வயதிற்கேற்ப 10லிருந்து 32 மிகிராம் வரை இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மேலிருக்கும் பட்டியல் படி உணவுகளிலிருந்து தானியங்கள், பருப்பு கீரை வகைகளை தேர்ந்தெடுத்து, கலவையாக உணவு சமைத்தால் எளிதில் தேவையான இரும்புச்சத்தை பெறலாம். புளிச்ச கீரை, புதினா, கறிவேப்பிலை, உலர்ந்த திராட்சை, பொரி, அவல், காராமணி, போன்றவை எளிதாக கிடைக்கக்கூடியவையாகவும், சுவையாகவும், இருக்கும்.இவற்றில் சிலவற்றை ஸ்நாக்சாக பையில் வைத்துக்கொண்டு அடிக்கடி சாப்பிடலாம்.

தவிர, கறிவேப்பிலை பொடி, அகத்தி,முறுங்கை கீரை பொடி, ஆகியவற்றை இட்லி/ தோசை / சப்பாத்தி / பூரி மாவு போன்றவற்றில் கலந்து சாப்பிடும்போதும் இரும்பு மற்றும் போலிக் அமிலம் நமக்கு கிடைக்கும்.

இரும்பு, புரதம் தவிர போலிக் அமிலமும் தேவைப்படும் என்றறிந்தோமல்லவா, அதை இங்கு கூறப்பட்டிருக்கும் உணவு வகைகளிலிருந்து எளிதாக பெறலாம். சாமை, வரகு, அகத்தி கீரை, கொடை மிளகாய், சவ்சவ், வெண்டை, பாகற்காய், முருங்கை, வாழைப்பூ, பப்பாளி, விலாம் பழம், கொய்யா, பீட்ருட், முள்ளங்கி, வேர்க்கடலை, பனீர், நண்டு, விலாங்கு மீன், வஞ்ச்ரமீன் ஆகியவை.

இந்த செப்டம்பர் மாதத்தை தேசிய சத்துணவு மாதமாக “வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு” என்ற கோட்பாடுடன் கொண்டாட நமது மத்திய மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன. இதன் ஒரு முக்கிய அங்கமாக, ரத்த சோகையில்லா பாரதம் உருவாக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த குறிக்கோளை அடைய நல்ல உணவு பழக்கங்கள் உதவும் என நம்புவோம்.

டாக்டர் ஏ.ஜெ.ஹேமமாலினி ராகவ்
மருத்துவ சத்துணவியல்துறை பேராசிரியர்
98413 27708
Tags:    

Similar News