ஆன்மிகம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2019-06-26 04:40 GMT   |   Update On 2019-06-26 04:40 GMT
சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சோழவந்தானில் உள்ள பிரசித்திபெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 16-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி அதிகாலையில் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். அப்போது அர்ச்சகர் சண்முகவேல் பூஜை செய்தார். பின்னர் சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை தாங்கி தேரோட்டத்தை தொடங்கிவைத்தார். தமிழ்நாடு கூட்டுறவு ஆணைய தலைவர் செல்லப்பாண்டி, திருப்பணிக்குழு தலைவர் சுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, பேரூராட்சி முன்னாள் சேர்மன் முருகேசன் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

இதில் மின்வாரிய உதவி என்ஜினீயர் செந்தில்குமார், கோவில் செயல் அலுவலர் சுசீலாராணி, பேரூராட்சி இளநிலை உதவியாளர் முத்துக்குமார், நகர கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ஜவகர்லால், சீர்பாதம் தாங்கி குழுத்தலைவர் முருகேசன் மற்றும் ஆலயப் பணியாளர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி சிறுவர்-சிறுமிகள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி நான்கு ரத வீதியில் வலம் வந்தனர். தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு வழி நெடுக அபிஷேக ஆராதனை செய்தனர். ஆங்காங்கே சிலர் நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் வாழைப்பழம், மாம்பழம், சில்லரை காசுகளை பக்தர்கள் சூறையிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

இரவு அம்மன் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடந்து, தேர் கோவிலை வந்து அடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சோழவந்தான் போலீசார் செய்திருந்தனர்.

திருவிழாவில் இன்று(புதன்கிழமை) மாலை கொடியிறக்கம் நடந்து, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று அபிஷேகம் நடைபெற்று இரவில் வண்ணப் பூக்களால் மின் ஒளி அலங்காரத்துடன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடைபெறும் வைகை ஆற்றில் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News