செய்திகள்
காய்கறிகள்

நெல்லையில் காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரிப்பு

Published On 2021-11-22 04:42 GMT   |   Update On 2021-11-22 04:42 GMT
நெல்லை மாநகர் பகுதியை பொறுத்தவரை டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் ஆகியவை பெரிய மார்க்கெட்டுகள் ஆகும்.
நெல்லை:

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக காய்கறிகள் விளைச்சல் அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் காய்கறிகள் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. நெல்லை மாநகர் பகுதியை பொறுத்தவரை டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் ஆகியவை பெரிய மார்க்கெட்டுகள் ஆகும்.

இந்த மார்க்கெட்டுகளுக்கு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்டவற்றில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வந்து சேரும். ஆனால் தொடர்மழையால் அங்கும் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

அதன்படி இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. வெள்ளை நிற கத்திரிக்காய் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்டது. பச்சை நிற கத்திரிக்காய் ரூ.120-க்கு விற்பனையானது.

இது தவிர அவரைக்காய் கிலோ ரூ.130-க்கும், பீன்ஸ் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கேரட் கிலோ ரூ.70 முதல் 90 வரையும், புடலைங்காய் ரூ.75-க்கும் விற்கப்பட்டது.

பெரிய வெங்காயம் கிலோ ரூ.35 முதல் 50 வரை தரத்திற்கேற்ப விற்கப்பட்டது. முருங்கைக்காய் ரூ.75-க்கும், பச்சை மிளகாய் ரூ.80-க்கும், உருளைக்கிழங்கு ரூ.50 வரையிலும் விற்பனையானது.

இதுகுறித்து பாளை மார்க்கெட் வியாபாரியான சிவா கூறுகையில், பாளை மார்க்கெட்டுக்கு தென்காசி மாவட்டத்தை அடுத்து மதுரை மார்க்கெட்டில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வரும். சில நேரங்களில் ஆந்திராவில் இருந்தும் காய்கறிகள் வரத்து இருக்கும்.

மதுரையில் இருந்து வரும் தக்காளிகள் 28 கிலோவாக ஒரு பெட்டியில் போடப்பட்டு மார்க்கெட்டுக்கு வரும். இவற்றின் விலை இன்று ரூ.3,200 ஆக இருக்கிறது. இதே போல் ஆந்திராவில் இருந்து 15 கிலோ ஒரு பெட்டியில் போடப்பட்டு ரூ.1,600-க்கு கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

பாளை மார்க்கெட்டுக்கு ஆந்திராவில் இருந்து தக்காளி வந்துள்ளதால் ரூ.120 வரை விற்கப்படுகிறது. மதுரையில் இருந்து கொள்முதல் செய்தால் ரூ.150 வரையிலும் விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.

இதனால் வியாபாரிகளின் லாபத்தையும் சேர்த்து விற்பனை செய்யும் போது காய்கறிகளின் விலை அதிகரித்து விடுகிறது என்றார்.
Tags:    

Similar News