செய்திகள்
பல்லடத்தில் உள்ள விசைத்தறி கூடத்தில் தேக்கமடைந்துள்ள காடாதுணிகள்.

திருப்பூரில் ரூ.200 கோடி ஜவுளிகள் தேக்கம்

Published On 2021-05-18 05:02 GMT   |   Update On 2021-05-18 05:02 GMT
திருப்பூரில் ஊரடங்கால் ரூ.200 கோடி ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறிகூடங்களில் உற்பத்தி செய்யப்படும் கிரே காடா காட்டன் துணி மகாராஷ்டிரா, ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே உள்ளிட்ட வெளி மாநில நகரங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.   தூத்துக்குடி துறைமுகம்  வழியாக வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது இத்துணிகள் ஊரடங்கு உத்தரவுகளால் விற்பனை செய்ய முடியாமலும், அனுப்பி வைக்க முடியாமலும் தேக்க மடைந்துள்ளன. வடமாநில வியாபாரிகள் பலர் ஜவுளி வாங்குவதை முழுமையாக நிறுத்தி விட்டனர். ஒருசில வியாபாரிகள் குறைந்த விலைக்கு துணியை கேட்கின்றனர்.  

இதனால் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக விசைத்தறி தொழிலை நம்பி வாழும் கூலிக்கு நெசவு செய்வோர் மற்றும் தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர்.
   
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

எங்களுக்கு துணி வியாபாரம் நடைபெற்று ஒரு மாதம் ஆகிவிட்டது. வட மாநிலங்களில் இருந்து வர வேண்டிய பணமும் வரவில்லை. வட மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளதால் வர்த்தகமும் நடைபெறுவதில்லை. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.
  
திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் எங்களது துறை சார்ந்து ரூ.200 கோடி மதிப்பிலான உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கமடைந்துள்ளது.
 
கடந்த முறை ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள எங்களுக்கு 8 மாதங்கள் பிடித்தன.தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள எத்தனை நாட் களாகும் என தெரியவில்லை.தற்போது உள்ள சூழலில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதால் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட்டோம் என்றார். 
Tags:    

Similar News