ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள் நாளை தொடங்குகிறது

Published On 2020-10-14 08:48 GMT   |   Update On 2020-10-14 08:48 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்பணம் நடைபெற உள்ளது. சாமி ஊர்வலத்தின் போது மாடவீதியில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்தது. அப்போது கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டு கோவிலுக்குள் உள்ள கல்யாண மண்டபத்தில் மட்டும் ஏழுமலையான் தாயார்களுடன் எழுந்தருளினார்.

இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் நாளை மறுதினம் 16-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது.

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் மாடவீதியில் சாமி ஊர்வலம், பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலில் தேவஸ்தானம் அறிவித்தது.

தற்போது கொரோனா பரவலை காரணம் காட்டி மாடவீதியில் சாமி ஊர்வலம், பக்தர்கள் அனுமதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

ஏழுமலையானுக்கு ஏகாந்தமாக தனிமையில் பிரம்மோற்சவத்தை நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பிரம்மோற்சவ நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் கல்யாண உற்சவ மண்டபம், ரங்கநாயகர் மண்டபத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.

வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கொடியேற்றம், கொடியிறக்கம் உள்ளிட்டவை நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது நடத்தப்பட மாட்டாது.

நாளை (வியாழக்கிழமை) பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்பணம் நடைபெற உள்ளது. 16-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்க திருச்சி உற்சவம் நடைபெறுகிறது.

அன்று இரவு பெரியசே‌ஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.

அதனை தொடர்ந்து வரும் நாட்களில் பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் கல்யாண உற்சவ மண்டபம், ரங்கநாயகர் மண்டபத்தில் காட்சி தருகிறார்.

20-ந்தேதி காலை மோகினி அவதாரம், இரவு கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது.

23-ந்தேதி காலை 8 மணிக்கு தங்க தேரோட்டம் நடக்கிறது. பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர்.

பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான 24-ந்தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை பல்லக்கு உற்சவம், திருச்சி உற்சவம், காலை 6 மணி முதல் 9 மணி வரை திருமஞ்சனம், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவ விழா பணிகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஜவஹர்ரெட்டி கண்காணித்து வருகிறார்.

பிரம்மோற்சவத்தின் போது ரூ.300 கட்டண சிறப்பு தரிசன பக்தர்கள் ஸ்ரீவாரி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்த பக்தர்கள், வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

சாமி ஊர்வலத்தின் போது மாடவீதியில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
Tags:    

Similar News