செய்திகள்
கொலை செய்யப்பட்ட மணிவண்ணன்.

புதுவை அருகே பழிக்குப்பழியாக அரசு ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை

Published On 2021-10-15 04:51 GMT   |   Update On 2021-10-15 04:51 GMT
புதுவை அருகே பழிக்குப்பழியாக அரசு ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேதராப்பட்டு:

புதுவை காமராஜர் நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 52).

இவர் புதுவை கோரிமேடு அருகே உள்ள தமிழக பகுதியான திருநகரில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

ஆயுத பூஜையையொட்டி நேற்று இரவு மணிவண்ணன் தான் பணிபுரியும் தண்ணீர் தொட்டிக்கு வந்து பூஜையில் பங்கேற்றார். அப்போது ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை வழிமறித்த அக்கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டியது.

அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைய முயன்ற மணிவண்ணனை அக்கும்பல் தலையில் பயங்கரமாக வெட்டி சிதைத்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதன்பிறகு அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

இதுகுறித்து ஆரோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அருண், இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மணிவண்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மணிவண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர்.

இதுகுறித்து மணிவண்ணன் மனைவி வள்ளி ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது கொலைக்கான காரணம் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அதன் விவரம் வருமாறு:-

கடந்த ஆண்டு செப்டம் பர் 30-ந்தேதி புதுவை மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் நடைபயிற்சி சென்ற கோரிமேடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சுந்தர் என்கிற மாந்தோப்பு சுந்தர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட மணிவண்ணனின் மகன்கள் சுந்தர், வினோத் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இவர்களை பழிவாங்க எதிரிகள் நோட்டமிட்டு வந்தனர். இதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். கடந்த மாதம் 30-ந் தேதி மாந்தோப்பு சுந்தரின் நினைவு நாள் வந்தது.

அப்போது சுந்தர், வினோத்தை கொலை செய்ய எதிரிகள் திட்டம் தீட்டி இருந்தனர். ஆனால் இருவரும் ஊருக்குள் நுழைய கோரிமேடு போலீசார் தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இதனால் எதிரிகளின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர், வினோத்துக்கு பதிலாக அவர்களது தந்தை மணிவண்ணனை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மணிவண்ணன் கொலை தொடர்பாக மாந்தோப்பு சுந்தரின் மனைவி செல்வி, அவரது மகன் ஜோஸ்வா மற்றும் மது, பாஸ்கர், ஆனந்தராஜ், சரணன், புத்தர், முருகன் என்ற வெட்டு முருகன் ஆகிய 8 பேர் மீது மணிவண்ணன் மனைவி புகார் அளித்தார்.

கொலையாளிகளை பிடிக்க சென்னையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாந்தோப்பு சுந்தரின் ஆதரவாளர்கள் 3 பேர் போலீசில் சிக்கியதாகவும் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மணிவண்ணன் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து புதுவை, தமிழக பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் புதுவை போலீசாரும், கோட்டக்குப்பம், ஆரோவில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News