செய்திகள்
கோப்புபடம்

அமராவதி அணையில் மீன் விற்பனை தொடக்கம் - போட்டி போட்டு வாங்கும் பொதுமக்கள்

Published On 2021-10-21 07:09 GMT   |   Update On 2021-10-21 07:09 GMT
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை முடிவடைந்ததை தொடர்ந்து அமராவதி அணையில் மீன்கள் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
உடுமலை:

உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை 10க்கும் மேற்பட்ட பரிசல்கள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

புரட்டாசி மாதம் என்பதால் பொதுமக்கள் இறைச்சி மற்றும் மீன் மாமிசம் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டாததால் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக அமராவதி அணையில் மீன் பிடிக்கும் மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டனர்.

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை முடிவடைந்ததை தொடர்ந்து அமராவதி அணையில் மீன்கள் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். கட்லா, ரோகு, மிர்கால், மற்றும் ஜிலேபி மீன்கள் மீன்கள் பிடிக்கப்பட்டு மீன் வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்லா, மிர்கால், ரோகு ஆகிய மீன்கள் கிலோ ரூ.170க்கும் ஜிலேபி ரூ.85க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மீன்களை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். இதனால் ஒரு சில மணி நேரங்களிலேயே அனைத்து மீன்களும் விற்றுத் தீர்ந்தன.
Tags:    

Similar News