செய்திகள்
போலீஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டம்

திருவனந்தபுரம் அருகே புகார் அளிக்க வரும் மக்களுக்கு காய்கறி வழங்கும் போலீசார்

Published On 2021-06-09 09:16 GMT   |   Update On 2021-06-09 09:16 GMT
திருவனந்தபுரம் அருகே உள்ள போலீஸ் நிலையத்தை, சுற்றிலும் தரிசு நிலமாக கிடந்த 14 சென்ட் நிலத்தை பத்து வகையான காய்கறிகள் விளையும் பசுமை தோட்டமாக போலீசார் உருவாக்கியுள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வர்கலா போலீஸ் நிலையம் உள்ளது. கடலோர பகுதியான இங்கு கடந்த ஆண்டுதான் போலீஸ் நிலையம் கட்டப்பட்டது. வர்கலா போலீஸ் நிலையத்தை முதல்-மந்திரி பினராய் விஜயன் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த போலீஸ் நிலையம் கேரளாவின் முதல் பசுமை போலீஸ் நிலையமாக உருவாகி உள்ளது. இங்கு பிற போலீஸ் நிலையங்களில் இருந்து மாறுபட்டு இயற்கை காய்கறித் தோட்டம் அமைக்கப்பட்டு பசுமையாக காட்சி அளிக்கிறது. இந்த போலீஸ் நிலையத்தை, சுற்றிலும் தரிசு நிலமாக கிடந்த 14 சென்ட் நிலத்தை பத்து வகையான காய்கறிகள் விளையும் பசுமை தோட்டமாக போலீசார் உருவாக்கியுள்ளனர்.

உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், மிளகாய், கேப்பேஜ் உள்ளிட்ட 10 வகையான காய்கறிகள் விளைகின்றன. ரசாயன உரம் இல்லாமல் விளையும் பசுமை காய்கறிகளை போலீசார் புகார் அளிக்க வருகின்ற பொதுமக்களுக்கு வழங்குகிறார்கள். மேலும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை போலீசாரும் வீட்டிற்கு எடுத்து செல்கின் றனர்.

மேலும் வர்கலா போலீஸ் நிலைய சுவரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாசகங்கள் எழுதப்பட்டுள் ளன. படங்களும் வரையப்பட்டுள்ளது. இங்கு செயற்கை குளம் அமைத்து வித விதமான மீன்களும் வளர்க்கப்படுகின்றன. இங்கு பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் முயற்சியால் இந்த பசுமை தோட்டம் உருவாக்கப்பட்டது.

“வர்கலா போலீஸ் நிலையத்தை சுற்றி முன்பு தரிசாக கிடந்தது. நிலத்தை பசுமையாக மாற்றினால் என்னவென்று தோன்றியது. நாங்கள் இந்த நிலத்தை வெட்டி காய்கறி தோட்டம் அமைக்கும் வகையில் மாற்றினோம். இப்போது இயற்கையான காய்கறிகள் விளைகின்றன.

10 வகையான காய்கறி செடிகளை நட்டு வளர்த்து உள்ளோம். காய்கறிகளை பொதுமக்களுக்கு அளிக்கிறோம். போலீசாரும் வீடுகளுக்கு கொண்டு செல்கிறோம். தற்போது இந்தியாவின் முக்கியமான தாவரங்களை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News