தமிழ்நாடு
பேரணாம்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சீஸ்மோ கிராப் கருவி

பேரணாம்பட்டில் நில அதிர்வை பதிவு செய்யும் சீஸ்மோ கிராப் கருவி பொருத்தம்

Published On 2022-01-05 09:48 GMT   |   Update On 2022-01-05 09:48 GMT
பேரணாம்பட்டு தாசில்தார் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பான இடத்தில் சீஸ்மோ கிராப் கருவி பொருத்தப்பட்டது. ஒரு மாத காலம் அக்கருவி அங்கு பொருத்தப்பட்டிருக்கும்.
பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு நகராட்சிக்கு உள்பட்ட தரைக்காடு, குப்பைமேடு, நகரை ஒட்டியுள்ள ஒன்றியத்தின் சில பகுதிகளில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது.

இதில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் லேசான விரிசல்கள் ஏற்பட்டன. நில அதிர்வு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி விட்டுச் சென்றார்.

இதேபோல் குடியாத்தம், ஆம்பூர் பகுதியிலும் தொடர்ந்து நில நடுக்கம் உணரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள மத்திய புவியியல் துறையின் உதவி புவியியாளர் அனிமஸ் தாகூர், சென்னையை சேர்ந்த மூத்த புவியியலாளர் சிவகுமார், வேலூர் வி.ஐ.டி.யின் புவியியல் துறை பேராசிரியர் கணபதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் சில நாட்களுக்கு முன் பேரணாம்பட்டு பகுதியில் முதல்கட்ட ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அக்குழுவினர் நேற்று 2-ம் கட்ட ஆய்வு நடத்தினர்.

நில அதிர்வை பதிவு செய்யும் சீஸ்மோ கிராப் எனும் கருவியை மண்ணில் பொருத்தி ஆய்வு செய்ய திட்டமிட்டனர். இக்கருவியை பொருத்த பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்ய பல்வேறு இடங்களை குழுவினர் பார்வையிட்டனர்.

இறுதியில் பேரணாம்பட்டு தாசில்தார் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பான இடத்தில் சீஸ்மோ கிராப் கருவி பொருத்தப்பட்டது. ஒரு மாத காலம் அக்கருவி அங்கு பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த கருவியானது பேரணாம்பட்டு பகுதியைச் சுற்றி 50 கி.மீ. பரப்பளவில் ஏற்படும் நிலஅதிர்வை பதிவு செய்யும். அதன் அடிப்படையில் நில அதிர்வு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது தெரியும் என குழுவினர் தெரிவித்தனர்.


Tags:    

Similar News