உள்ளூர் செய்திகள்
கலெக்டர் வினீத் தேசிய கொடியை ஏற்றி வைத்த காட்சி.

குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

Published On 2022-01-26 08:20 GMT   |   Update On 2022-01-26 08:20 GMT
திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வினீத் வழங்கினார்.
திருப்பூர்:

73-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் இன்று நடந்த விழாவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களை பறக்க விட்டு, மூவர்ண பலுனையும் பறக்கவிட்டார்.

இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். அதன்படி திருப்பூர் மாநகர போலீசில் 33 போலீசாருக்கும், மாவட்ட போலீசில் 35 பேருக்கும், தீயணைப்புத் துறையில் 19 பேருக்கும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 பேருக்கும், மாநகராட்சி ஊழியர்கள் 14 பேர், போக்குவரத்து துறை, கல்வித் துறை, சமூக நலத்துறை, உணவு பாதுகாப்பு துறை என 216 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார். 

அதேபோல் 73 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன், மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், மாநகர துணை கமிஷனர்கள் ரவி, அரவிந்த், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

குடியரசு தின விழாவையொட்டி சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கொரோனா கட்டுப்பாடு காரனமாக பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதேபோல் பொதுமக்களுக்கும் நிகழ்ச்சியை பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை.


மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி. 

திருப்பூர் மாநகராட்சி சார்பில் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கமிஷனர் கிராந்திகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசியக்கொடியை ஏற்றினார். 

அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் என 140 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், மாநகர பொறியாளர் சபியுல்லா, உதவி ஆணையாளர்கள் தங்கவேல் ராஜன், வாசுகுமார், சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தாராபுரம் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தின விழா நடைபெற்றது. பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கல்லூரியின் தாளாளருமான கே.எஸ். என். வேணுகோபால் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார். 

நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணன் நல்லம்மை பாலிடெக்னிக் அறக்கட்டளை உறுப்பினர்கள் சவுந்திரராஜன், முத்துக்குமார் மற்றும் முதல்வர் முரளி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 73ம் ஆண்டு குடியரசு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றிய சேர்மன் எஸ் .வி. செந்தில்குமார் தேசியகொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் துணைதலைவர் சசிக்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், ஜீவானந்தம் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

உடுமலை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் 2 நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் இணைந்து 73 வது இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். நூலகர் கணேசன் வரவேற்றார். ராணுவவீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி சுபேதார், மேஜர் கோவிந்தராஜ் , நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் பணிபுரிந்த ராணுவ வீரர் சந்திரசேகர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அவர் பேசும்போது 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் தான் பணிபுரிந்த காலங்களை நினைவுகூர்ந்தார். 

நிகழ்ச்சியில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நல்லாசிரியர் விஜயலட்சுமி கலந்து கொண்டு குடியரசு தினவிழா குறித்து பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் மற்றும் நூலக வாசகர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News