செய்திகள்
சசிகலா

சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்

Published On 2021-01-25 04:27 GMT   |   Update On 2021-01-25 04:27 GMT
ஐசியூவில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவை பெங்களூரு மருத்துவமனையில் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சுப்ரீம் கோர்ட்டால் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த (பிப்ரவரி) மாதம் முடிவடைகிறது. ஆனால் சசிகலா ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் அறிவித்துவிட்டது. இதையடுத்து சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தினார். விடுதலை ஆகும் நாள் நெருங்கிவிட்ட நிலையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறை நிர்வாகம் கடந்த 20-ந் தேதி பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் அனுமதித்தது.

அங்கு 2 நாட்கள் சிகிச்சை பெற்று சசிகலாவுக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக கலாசிபாளையா பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், நுரையீரலில் தீவிரமான தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அதே மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் முதலில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. 4 லிட்டர் சிலிண்டர் மூலம் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

* ஐசியூவில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

* சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, உணவு உட்கொள்கிறார்.

* சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது.

* சசிகலா எழுந்து உட்கார்ந்து, உதவியுடன் நடக்கிறார்.

* ரத்தத்தில் சர்க்கரை அளவு 205 ஆக அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது.

* சசிகலா சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News