செய்திகள்
மதுரை காமராஜர் சாலையில் ஆறாக ஓடிய மழை நீரில் சிரமப்பட்டு சென்ற வாகனங்கள்.

மதுரையில் தொடர் மழை: சாலையில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

Published On 2020-11-18 14:19 GMT   |   Update On 2020-11-18 14:19 GMT
மதுரையில் பெய்து வரும் தொடர் மழையால் சேதம் அடைந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மதுரை:

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. மதுரையில் கடந்த வாரம் தொடங்கிய மழை தற்போது வரை தொடர்கிறது. தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் காலையில் பெய்த மழையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பின்னர் மழை பெய்ய வில்லை. எனவே அனைவரும் தீபாவளி பண்டிகையை மழை இல்லாமல் சந்தோஷமாக கொண்டாடினார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய மழை நேற்று இரவு வரை தொடர்ந்து பெய்தது.

நேற்று மாலையில் பெய்த அடை மழையால் வழக்கம் போல் பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், தல்லாகுளம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், திருப்பரங்குன்றம் சாலை, நான்கு மாசி வீதிகள், செல்லூர், அண்ணாநகர், புதூர் என நகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. அலுவலகங்கள் மற்றும் வேலைக்கு சென்று வாகனங்களில் திரும்புபவர்கள் மழையில் நனைந்தபடியே செல்ல நேர்ந்தது.

மதுரையில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் நடந்து வருவதாலும், நகரில் சாலைகளின் இருபுறமும் கால்வாய் அமைக்கும் பணிகளாலும் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு இருக்கிறது. இதில் மழை நீர் தேங்கி நின்றதால் அந்த பள்ளங்களில் வாகன ஓட்டிகள் சிக்கி பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது தவிர நகரின் முக்கிய இடமான பெரியார் பஸ் நிலையத்தின் முன்பு சாலையில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதியை வண்டிகள் கடந்து செல்ல பெரிதும் சிரமப்பட்டன.

நேற்று காலை அங்கிருந்த பள்ளங்களில் போக்குவரத்து போலீசார் மணல், கற்களை போட்டு சீரமைத்தனர். மீண்டும் மாலையில் பெய்த மழையால் அந்த பகுதி மீண்டும் பாதிக்கப்பட்டது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி மற்றும் சாலையின் இருபுறமும் கால்வாய் அமைக்கும் பணியினை விரைந்து முடித்து அங்கு சாலையை சீரமைத்து மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர் மழையால் நகரை ஒட்டியுள்ள கண்மாய்கள், குளங்களில் நீர் நிரம்பி வருகிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

விரகனூர்-57, விமான நிலையம்-60.5, சோழவந்தான்-51, சிட்டம்பட்டி-21.6, கள்ளந்திரி-14.8, மதுரை வடக்கு-45.6, தல்லாகுளம்-52, வாடிப்பட்டி-11, பேரையூர்-14.3, கள்ளிக்குடி-28.6, திருமங்கலம் 37.6, மேலூர்-30, வாடிப்பட்டி-39, உசிலம்பட்டி- 31.2.
Tags:    

Similar News