செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

வேலைவாய்ப்பை அதிகரிக்கவே டி.என்.பி.எஸ்.சி தேர்வில் மாற்றம்: ஜெயக்குமார் விளக்கம்

Published On 2019-09-29 10:03 GMT   |   Update On 2019-09-29 11:09 GMT
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கவே டி.என்.பி.எஸ்.சி தேர்வில் சில மாற்றம் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை:

முன்னாள் மேயர் சிவராஜின் 128-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

பாண்டவர்கள் வழியில் அ.தி.மு.க. மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறது. கவுரவர்கள் வழியில் தி.மு.க. கூட்டணி அதர்ம வழியில் செயல்பட்டு வருகிறது. ஒருபோதும் தி.மு.க. கூட்டணி ஆட்சியை பிடிக்க இயலாது.

கட்சியில் இருக்கும் குடும்ப சண்டையில் வேண்டுமானால் நாற்காலியை பிடிக்க முடியும். ஆட்சியை அவர்களால் பிடிக்க முடியாது. தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்பது பகல் கனவு.

அரசு பணியில் ஆங்கிலம் படித்தவர்கள் தான் 60 சதவீதம் பேர் தேர்வாகி வருகின்றனர். எனவே தமிழ் வழியில் படித்தவர்களும் வர வேண்டும் என்று தான் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக இளைஞர்களிடையே அரசு வேலைவாய்ப்பு குறித்த ஆர்வம் அதிகரித்து இருப்பதாகவும் வேலை வாய்ப்புகளை பெருக்கிட அரசு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது.

இளைஞர்கள் அரசு சார்பில் அளிக்கக்கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளை கற்றுக் கொண்டு தாமாக தொழில் துவங்க வருங்காலங்களில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News