தொழில்நுட்பம்

புதிய அம்சங்களுடன் அப்டேட் ஆகும் ஃபேஸ்புக் வாட்ச்

Published On 2019-06-14 07:35 GMT   |   Update On 2019-06-14 07:35 GMT
ஃபேஸ்புக் வாட்ச் சேவையில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் கூடுதல் மொழிகளை சேர்க்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.



ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆன்-டிமாண்ட் வீடியோ சேவையில் புதிய பகுதிகளை சேர்க்க அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. ஃபேஸ்புக் வாட்ச் சேவையை மாதம் 72 கோடி பேரும், தினமும் 14 கோடி பேரும் பயன்படுத்தி வரும் நிலையில், சேவையை மேலும் பிரபலப்படுத்த புதிய வசதிகளை வழங்க ஃபேஸ்புக் சோதனை செய்கிறது.

அறிமுகமான ஒரு வருடத்தில் ஃபேஸ்புக் வாட்ச் சேவையை தினமும் 14 கோடி பேர் குறைந்தபட்சம் ஒரு நிமிடம் முதல் அதிகபட்சம் 26 நிமிடங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என ஃபேஸ்புக் சமீபத்தில் தெரிவித்தது.

வாட்ச் சேவையை கொண்டு ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட அனுபவங்களை வழங்குவதே எங்களின் நோக்கம். இதற்கு பல்வேறு வீடியோ தயாரிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் வீடியோ தொகுப்புகளை வழங்குகிறோம் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் பரேஷ் ராஜ்வாத் தனது வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.



பயனர்களுக்கு அதிகளவு வீடியோக்களை வழங்க, ஃபேஸ்புக் தொடர்ந்து சர்வதேச பிராண்டுகளுடன் புதுப்புது ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு வருகிறது. ஃபேஸ்புக் ஒரிஜினல்ஸ் தவிர, உலகம் முழுக்க வீடியோ தயாரிப்பாளர்களுடன் ஃபேஸ்புக் கூட்டணி அமைத்து வருகிறது.

ஃபேஸ்புக் வாட்ச் சேவை கனடாவில் துவங்கப்படுகிறது. முன்னதாக இந்தியா, அமெரிக்கா மற்றும் டென்மார்க் என உலகம் முழுக்க சுமார் 43 நாடுகளில் வாட்ச் சேவையில் விளம்பரங்களுக்கான வசதியை ஃபேஸ்புக் சேர்த்தது. 

தற்சமயம் ஃபேஸ்புக்கின் வாட்ச் சேவை 17 மொழிகளில் கிடைக்கும் நிலையில், புதிதாக கன்னடா, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் ஸீவிடிஷ் போன்ற மொழிகளுக்கான வசதி சேர்க்கப்படுகிறது.
Tags:    

Similar News