செய்திகள்
தலைமைப் பண்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய சத்குரு

ஈஷாவில் 219 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற தலைமைப் பண்பு நிகழ்ச்சி

Published On 2019-12-02 10:18 GMT   |   Update On 2019-12-02 10:18 GMT
ஈஷா தலைமைப் பண்பு மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியில் 12 நாடுகளைச் சேர்ந்த 219 வர்த்தக தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கோவை:

ஈஷா தலைமைப் பண்பு மையம் ‘ஈஷா இன்சைட்’என்ற பெயரில் 4 நாள் தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியை 2012-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. வணிகத்தில் உச்சத்தை தொட்ட தலைசிறந்த வர்த்தக தலைவர்களின் வெற்றி ரகசியங்களை, வளர்ந்து வரும் வர்த்தக தலைவர்கள், அரசு மற்றும் தனியார் உயர் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்தாண்டு ‘ஈஷா இன்சைட்’நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நவம்பர் 27-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12 நாடுகளில் இருந்து 219 வர்த்தக தலைவர்கள் பங்கேற்றனர். 

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவர் பி.முத்துராமன், ‘மேக் மை டிரிப்’ நிறுவனர் தீப் கல்ரா ஆகியோர் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான சோம்நாத், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், நல்லி லிக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் லாவண்யா நல்லி, ‘நியர்பை டெக்னாலிஜிஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் குமார் பஜாஜ் உள்ளிட்டோர் சிறப்பு பேச்சாளர்களாக பங்கேற்று தங்களின் வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில், “பெரும்பாலானோர் பார்க்கத் தவறுவதைப் பார்க்கும் திறனுடன் இருப்பதே அடிப்படையில் ‘இன்சைட்’ எனப்படுகிறது. இதுவே தலைமைப் பண்பின் முத்திரை. இதோடு ஊக்கம் மற்றும் நேர்மையைச் சேர்த்தால், தனிமனிதருக்கும் சமுதாயத்திற்கும் வெற்றி உறுதி. ஒருவர் உண்மையாகவே வெற்றிகரமாக இருக்க விரும்பினால், தன்னைத் தானே எப்படி கையாள்வது, எப்படி மேம்படுத்துவது என கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். உலகில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது பலவற்றை சார்ந்திருக்கலாம், ஆனால் நாம் எப்படி இருக்கிறோம் என்பது 100 சதவீதம் நம் கைகளில் தான் உள்ளது. எவ்வித சூழ்நிலையிலும் நன்றாக இயங்கக்கூடிய மனிதர்களை நாம் உருவாக்காவிட்டால், உண்மையான தலைவர்கள் இருக்கமாட்டார்கள்; இருக்கும் சூழ்நிலையை ரசிக்கக்கூடிய மனிதர்கள் மட்டுமே நம்மிடம் இருப்பார்கள். அவர்கள் புதுமையான, மகத்துவமான எதையும் உருவாக்க மாட்டார்கள். தலைமைப் பண்பு என்பது விரும்பும்படி செயல்களை நிகழச்செய்யும் கலை மற்றும் அறிவியல்” என்றார்.

இஸ்ரோ விஞ்ஞானி சோம்நாத் பேசுகையில், “நாம் விரும்பும் எந்த அளவிலும் ஒரு ராக்கெட்டை நம்மால் இன்று வடிவமைக்க முடியும். நாம் விரும்பும் எந்த தொழில்நுட்பத்தின் செயற்கைக்கோளையும் உருவாக்கி, அதை நாம் விரும்பும் சுற்றுப்பாதையில் செலுத்தலாம். அது நம் கைகளுக்குள் இருக்கிறது.

நாட்டில் தொலைக்காட்சி அல்லது ஒளிபரப்பு அமைப்பு இல்லாத நேரத்தில், இந்தியாவில் டிவி அடிப்படையிலான தகவல் தொடர்பு அமைப்புகளை பரிசோதித்த முதல் நபர் விக்ரம் சாராபாய் ஆவார். 

இஸ்ரோவில் நாங்கள் பயிற்சிகளை அதிகம் நடத்துவது இல்லை. விண்வெளி தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த மூத்தவர்களிடம் இருந்து இளையவர்கள் கற்றுக்கொள்ளும் முறையை தான் பின்பற்றுகிறோம்” என்றார். 

வர்த்தக வளர்ச்சியை தாண்டி, உள்நிலை வளர்ச்சிக்காக யோகா, தியான பயிற்சிகளிலும் பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். மேலும், குஜராத்தின் புகழ்பெற்ற தாண்டியா நடனம், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Tags:    

Similar News