செய்திகள்
சீதாராம் யெச்சூரி , பிரதமர் மோடி

மோடியின் புதிய முழக்கம் ஜெய் ஹிந்த் அல்ல, ‘ஜியோ ஹிந்த்’ -சீதாராம் யெச்சூரி விமர்சனம்

Published On 2019-10-14 10:34 GMT   |   Update On 2019-10-14 10:34 GMT
மோடியின் புதிய முழக்கம் சுபாஷ் சந்திரபோஸ் முழங்கிய ஜெய்ஹிந்த் அல்ல, ஜியோஹிந்த் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் தஹானு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வினோத் நிகோலுக்கு ஆதரவாக நேற்று  நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றார். 

பிரச்சார உரையில் அவர் பேசியதாவது:-

பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, மற்றும் முதலாளித்துவ நட்பு  காரணமாக இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு உதவுவதற்காக, அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய நிறுவனங்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் இருந்தன. சில தொழிலதிபர்களின் முன்னேற்றத்திற்கு உதவ, பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பிபிசிஎல்-ஐ மூடுவதற்கான திட்டங்களும் இருந்தன.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஜெய் ஹிந்தின் முழக்கத்திற்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடியின் புதிய முழக்கம்‘ ஜியோ ஹிந்த் ’ஆகிவிட்டது.

பல தலைமுறைகளாக காடுகளில் வாழும் பழங்குடியினரின் உரிமைகளை மீட்டெடுக்க முற்படும் வன உரிமைச் சட்டம் 2006 இல் இடதுசாரி கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக இயற்றப்பட்டது. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு அதை செயல்படுத்தவில்லை. 

நாட்டையும் அதன் குடிமக்களையும் காப்பாற்ற பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள  288 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 21ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ம் தேதியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News