செய்திகள்
இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பெயர் பலகையை ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்த காட்சி

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்

Published On 2021-02-20 11:25 GMT   |   Update On 2021-02-20 11:25 GMT
நாகையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம்:

நாகை நீலா தெற்கு வீதியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும் பாது கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை வரலாற்று சிறப்புமிக்க துறை. மனிதர்களின் ஒழுக்கம், பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை எடுத்து சொல்லி மற்றவர்களுக்கு கொண்டு செல்லும் துறை ஆகும்.

உலகபுகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை மாமன்னர் ராஜராஜசோழன் நிர்மானம் செய்துள்ளார். அதை பார்க்கும் போது தமிழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலையின் சிறப்பை உணரமுடிகிறது.

இந்துசமய அறநிலையத்துறைக்கு சொத்துக்கள் நிறைய உள்ளன. ஆனால் இதன் மூலம் வரும் வருமானம் கேள்விக்குறியாக உள்ளது. வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக தான் நாகை, திண்டுக்கல், கடலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர் உள்பட 9 இடங்களில் புதிய இணை ஆணையர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மண்டலத்துடன் இருந்த திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரிய கோவில்கள் 388, சிறிய கோவில்கள் 2ஆயிரத்து 400 என மொத்தம் 2 ஆயிரத்து 788 கோவில்கள் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட நாகை மண்டல இணை ஆணையர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் மட்டும் இன்றி பள்ளிகள், கல்லூரிகளும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கோவில் சொத்துக்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தங்க.கதிரவன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கிரிதரன், இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர்கள் ராணி (நாகை), ஹரிஹரன் (திருவாரூர்), செயல் அலுவலர்கள், அறநிலையத்துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News