செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2021-02-26 02:35 GMT   |   Update On 2021-02-26 05:37 GMT
மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1ந்தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு ரூ.565 கோடி மதிப்பில் நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டம் தொடக்க விழா மேட்டூரில் இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பொதுப் பணித்துறை நீர்வள ஆதார துறையின் சார்பில் ரூ.1.88 கோடி மதிப்பில் முடிவுற்ற 2 பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.53.49 கோடி செலவில் முடிவுற்ற 6 பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூ.3.75 கோடி மதிப்பில் முடிவுற்ற 21 பணிகள், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் ரூ.1.70 கோடி மதிப்பில் 2 பணிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.1.32 கோடி மதிப்பில் 4 பணிகள், கூட்டுறவு துறையின் சார்பில் ரூ.49.75 லட்சம் சார்பில் ஒரு பணி என மொத்தம் ரூ.62.63 கோடி மதிப்பில் முடிவுற்ற 36 பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.46 லட்சம் சார்பில் 2 புதிய திட்டப் பணிகள், மக்கள் நலவாழ்வு துறையின் சார்பாக ரூ.4.90 கோடி மதிப்பில் 21 புதிய திட்டங்கள் என மொத்தம் 23 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

விவசாய குடிமக்களின் கோரிக்கையை ஏற்று இன்றைய தினம் அம்மா ஆசியோடும், உங்களுடைய ஆசியோடும் இறைவனுடைய ஆசியோடும் இந்த திட்டத்தை நான் தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

அரசு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசகம் எடுத்த முயற்சியின் காரணமாகத்தான் கிட்டத்தட்ட குறுகிய காலத்திலேயே இந்த திட்டம் நிறைவடைந்திருக்கின்றது.

ஒவ்வொரு வாரமும் என்னை சந்திக்கின்ற போதெல்லாம் இந்த திட்டத்தை பற்றி ஆலோசனை நடத்தி, விரைவாக குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற முடியும் என்ற சாதனையை அவர் படைத்திருக்கின்றார்.

இந்த திட்டத்திற்கு நிலம் எடுப்பது ஒரு சவாலாக இருந்தது. இருந்தாலும் விவசாயிகளிடத்தில் கலெக்டர் ராமன் எடுத்துச்சொல்லி நம்முடைய வறண்ட பகுதிகளில் இருக்கின்ற குளங்கள், ஏரிகள் எல்லாம் நிரப்பப்பட வேண்டும். அதற்காக உங்கள் நிலத்தை தானாக முன்வந்து வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நம்முடைய விவசாய குடிமக்களும் இருக்கின்ற நிலைமையை உணர்ந்து வளர்ச்சி, செழுமையான பகுதியாக ஆக்குவதற்கு தங்களுடைய அர்ப்பணிப்பும் இதில் இடம் பெறுகின்ற வகையிலே அவர்களும் மனமுவந்து நிலத்தை கொடுத்து உதவினார்கள்.

நிலம் கொடுத்த அந்த நல்ல உள்ளங்களுக்கும், அதற்காக பாடுபட்ட கலெக்டருக்கும், தமிழக சிறப்பு ஆலோசகருக்கும், இந்த திட்டத்தை சிறப்பாக குறித்த நேரத்திற்குள் நடைமுறைபடுத்திய கட்டுமான நிறுவனத்திற்கும், பணியாற்றிய ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றபோது இங்கு இருக்கின்ற விவசாயிகள், ஏரிகள் வறண்ட பகுதியாக இருக்கின்றது. ஆகவே வெள்ளக்காலங்களில் வெளியேறுகின்ற உபரிநீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தார்கள்.

என் உள்ளத்தில் உண்மையிலேயே எப்படியாவது விவசாயிகளுக்கு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தோன்றியது. இந்த திட்டம் மிகச்சிறப்பாக இறைவன் அருளால் இன்றைக்கு தொடங்கப்பட்டு இருக்கின்றது. அதுவும் குறுகிய காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

15.07.2019 அன்று சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையின்போது நான் அறிவித்தேன். இன்னும் 2 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அறிவித்தவுடனே அதற்காக ரூ.565 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதற்கு தேவையான நிலம் எடுக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டு துரிதமாக பணியினை தொடங்கினோம்.

மேட்டூரில் இருந்து வெள்ள உபரிநீரை திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து எம்.காளிப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் நீரேற்றும் செய்து, அதன் வழியாக வெள்ளாளபுரம் துணை நீரேற்றும் நிலையம் மற்றும் கன்னந்தேரி துணை நீரேற்றும் நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று வழங்கப்படும், 4238 ஏக்கர் பாசன நிலம், சுமார் 38 கிராமங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் ஏரிகளுக்கு தேவைப்படும் மொத்த நீரின் அளவு அரை டி.எம்.சி., வெள்ள உபரிநீரை திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து 30 நாட்களுக்கு தினந்தோறும் விநாடிக்கு 214 கன அடி வீதம் நீரேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அம்மாவுடைய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. டெல்டா பாசன விவசாயிகளின் பிரச்சினை தீர்க்க அம்மா காவிரி நதிநீர் தொடர்பாக சட்ட போராட்டம் நடத்தினார்கள். அந்த வழியிலேயே வந்த அம்மாவுடைய அரசு உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி காவிரி நதி நீர் பிரச்சினையை தீர்த்து வைத்தது.

நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று ஒரு வரலாற்று சாதனையை இந்த காவிரி நதி நீர் தீர்ப்பை பெற்று தந்தது. விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசு எங்களுடைய அரசாக செயல்படும் என தெரிவித்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்து பாதுகாப்பையும் உறுதி செய்தோம்.

வறட்சி, புயல், வெள்ளம், தொடர் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். நாங்கள் தொடக்க வேளாண் வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடனை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையையும் ஏற்று அரசு பயிர்கடனை ரத்து செய்து இருக்கிறது.

ஒரு அரசுடைய ஆயுட்காலம் 5 ஆண்டுகள். அந்த 5 ஆண்டு காலத்திலே 2 முறை விவசாயிகளுடைய பயிர்க்கடனை ரத்து செய்து வரலாறு படைத்த அரசு அம்மாவுடைய அரசு.

அம்மா அவர்கள் 2016-ல் தேர்தல் அறிக்கையின்போது நான் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் குறிப்பிட்டார்கள். முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், பயிர்க்கடனை ரத்து செய்தார். ஒரே 5 ஆண்டு காலத்தில் 2 முறை விவசாயிகளுடைய பயிர்க்கடனை ரத்து செய்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு.

எல்லோரும் தேர்தல் நேரத்தில் தான் கோரிக்கை வைப்பார்கள். அதனை தேர்தல் அறிக்கையாக வெளியிடுவார்கள். ஆனால் அம்மாவுடைய அரசு தேர்தல் வருவதற்கு முன்பாகவே கோரிக்கை நிறைவேற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.

இதேபோல் விவசாயிகள் மும்முனை மின்சாரம் வேண்டும் என்று கேட்டார்கள். இது மிக மிக முக்கியமானது. விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து எல்லாம் மக்களுக்கும் கொடுக்கப்படும். இன்னும் பல்வேறு திட்டங்கள் அரசால் நிறைவேற்றப்படுகின்றது.

ரூ.2247 கோடி வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. இதுவரை தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய சரித்திரம் கிடையாது. ஆனால் நாங்கள் வழங்கி சரித்திரம் படைத்துள்ளோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் வேளாண் பெருமக்களுக்கு அதிக இழப்பீடு பெற்று தந்துள்ளோம். நீர்மேலாண்மையில் சிறந்த மாநிலம் என்று 2019-2020-ல் தேசிய விருது பெற்று இருக்கிறோம்.

கடலில் கலக்கின்ற நீர் சுத்தமாக இருக்க வேண்டும். குடிப்பதற்கு தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும். விவசாயத்திற்கு தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தையும் எங்களுடைய அரசு நிறைவேற்றும்.

இந்த அரசு முழுக்க முழுக்க வேளாண் பெருமக்களின் நலன் காக்கின்ற அரசு. வேளாண் தொழிலாளர்களை காக்கக்கூடிய அரசு. நிலம் இல்லாமல், வீடு இல்லாமல் இருக்கின்ற அத்தனை விவசாயிகளுக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சந்திரசேகரன் எம்.பி., மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெற்றிவேல், ராஜா, வெங்கடாஜலம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News