செய்திகள்
கோப்பு படம்.

ஆற்றில் அடித்து வரப்பட்ட பெண் யார் அவர்?- போலீசார் விசாரணை

Published On 2020-11-28 13:30 GMT   |   Update On 2020-11-28 13:30 GMT
ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் பெண் பிணம் அடித்து வரப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த உடலை போலீசார் மீட்டு அவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஆரணி:

தமிழகத்தையே உலுக்கி வந்த ‘நிவர்’ புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக ஆரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் கன மழை பெய்தது. மேலும் செண்பகத்தோப்பு அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது, அமிர்தி வன உயிரியல் பூங்கா பகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக ஆரணி கமண்டல நதி ஆற்றில் அதிகப்படியான உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை சேவூர் ஊராட்சிக்குட்பட்ட சாணார்பாளையம் ஆற்றுப்பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

இது தொடர்பாக சமீபத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் ஆற்றுப்பகுதியில் ஆற்றங்கரை அருகே புதைக்கப்பட்ட பிணங்கள் ஏதேனும் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதா, காணாமல் போனவர்கள் அடித்துச் செல்லப்பட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்

தகவல் அறிந்த ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பி.ஜெயராமன், ஆரணி தாசில்தார் செந்தில்குமார், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார், வருவாய்த் துறையினர் பிணம் மீட்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.

பிரேத பரிசோதனை செய்வதற்கு தகுதியான நிலையில் உடல் இல்லை என்பதனை அறிந்து அழுகிய நிலையில் உள்ள உடலை புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்த இடத்திலேயே மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News