செய்திகள்
மல்லிகை பூ

பாவூர்சத்திரம் அருகே மல்லிகை பூ விலையேற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-12-02 13:57 GMT   |   Update On 2019-12-02 13:57 GMT
பாவூர்சத்திரம் அருகே மழை காரணமாக மல்லிகை பூ மகசூல் இல்லாத காரணத்தினால் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டத்தில் பூ மார்க்கெட்டிற்கு பிரசித்த பெற்ற ஊர் பாவூர்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரம் ஆகும். இங்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தினமும் பிச்சி, கனகாம்பரம், மல்லிகை, கேந்தி, சம்பங்கி, கொளுந்து, துளசி, ரோஜா, முல்லைப்பூ, அரளி போன்ற பூக்களை ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு வருவர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு பெய்த மழை காரணமாக கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்த பூக்கள் விளைச்சலின்றி மார்க்கெட்டிற்கு குறைவான பூக்களே ஏலத்திற்கு வருகின்றன.

நேற்று முகூர்த்த நாள் என்பதால் பூ மார்க்கெட்டில் சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் அனைத்து வகை பூக்களை வாங்குவதற்கு குவிந்தனர். குறிப்பாக மல்லிகை பூக்களை வாங்குவதற்கு அனைத்து வியாபாரிகளும் போட்டி போட்டு கொண்டு தங்கள் தேவைக்கேற்ப பூக்களை கொள்முதல் செய்தனர்.

மழை காரணமாக மல்லிகை பூ மகசூல் இல்லாத காரணத்தினால் நேற்று முன்தினம் 20 கிலோ வரை தான் பூ விற்பனைக்கு வந்தது. இதனால் மல்லிகை பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையானது. மல்லிகை பூ விலையேற்றம் பாவூர்சத்திரம் பகுதி விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News