செய்திகள்
அரசு பேருந்துகள்

தீபாவளி பண்டிகை: மதுரையில் இருந்து 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2021-10-28 11:02 GMT   |   Update On 2021-10-28 11:02 GMT
மதுரை மாவட்டத்தில் எல்லீஸ் நகர், பொன்மேனி, பெரியார் பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி உள்பட 16 பணிமனைகள் உள்ளன.
மதுரை:

தீபாவளியை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 17 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக மதுரை மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி சீசன் சிறப்பு பஸ்களை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்று உள்ளன.

இங்கு ஒட்டுமொத்தமாக 2,166 அரசு பஸ்கள் உள்ளன. இவற்றில் “ஸ்பேர்” பஸ், நகரப் பேருந்துகளும் அடங்கும்.

இதில் 1,150 தீபாவளி சிறப்பு பஸ்களை இயக்குவது என்று மதுரை மண்டல போக்குவரத்து கழக நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதற்காக அந்தந்த பணிமனைகளில் சிறப்பு பஸ்கள் தயாராகி வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் எல்லீஸ் நகர், பொன்மேனி, பெரியார் பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி உள்பட 16 பணிமனைகள் உள்ளன. இங்கு உள்ள பஸ்களின் இயங்கு நிலையை உறுதி செய்வதில், அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தீபாவளிக்கு பிறகு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஆகும். எனவே வருகிற 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தொடர்ச்சியாக சிறப்பு பஸ்களை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக மதுரையில் இருந்து வருகிற 2-ந்தேதி 55 பஸ்களும், திண்டுக்கல்லில் இருந்து 40 பஸ்களும், விருதுநகரில் இருந்து 25 பஸ்களும் ஆக மொத்தம் 120 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

3-ந் தேதி மதுரையில் இருந்து 30 பஸ்களும், திண்டுக்கல்லில் இருந்து 25 பஸ்களும், விருதுநகரில் இருந்து 15 பஸ்களும் ஆக மொத்தம் 70 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக தீபாவளிக்கு முந்தைய 2 நாட்களில் மட்டும் 190 அரசு பஸ்களை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வருகிற 7-ம் தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்குவது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை 800-யை தாண்டும் என்று தெரிகிறது.

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் விடுமுறை நாட்களாக இருக்கும். இதனால் சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

அவற்றைக் கருத்தில் கொண்டு பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்களை இயக்குவது என்று மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகம் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
Tags:    

Similar News