செய்திகள்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா

ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் - பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 27-ந் தேதி வாக்குப்பதிவு

Published On 2019-12-10 17:35 GMT   |   Update On 2019-12-10 17:35 GMT
பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அறிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

ஊரக பகுதிகளில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக வருகிற 27-ந் தேதியும், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2-ம் கட்டமாக வருகிற 30-ந் தேதியும் வாக்குப்பதி நடைபெறும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அறிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 37 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 53 கிராம ஊராட்சி தலைவர்கள், 462 வார்டு உறுப்பினர்கள் பதவியிடத்துக்கும், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 39 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 68 கிராம ஊராட்சி தலைவர்கள், 570 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும் என மொத்தம் 1,237 பதவியிடங்களுக்கு நேர்முக தேர்தல் 2 கட்டமாக 648 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நேர்முக தேர்தல் முதற்கட்டமாக பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு 293 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 355 வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. இதில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி, அடிப்படையிலும் நடைபெறுகிறது.

வேட்பு மனு தாக்கல் வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை வருகிற 17-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 19-ந் தேதி கடைசி நாள் ஆகும். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நாள் அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News