செய்திகள்
மழை

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் தொடர்ந்து கோடை மழை

Published On 2021-04-17 12:47 GMT   |   Update On 2021-04-17 12:47 GMT
தென்காசி மாவட்டத்தில் நேற்று சங்கரன்கோவில் பகுதியில் மட்டும் 3 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.


நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் கொளுத்துவதும், பிற்பகல் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் இடி-மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்யுவதுமாக உள்ளது.

நெல்லை மாநகர பகுதியில் நேற்று பிற்பகல் திடீரென்று கனமழை கொட்டியது. அதிகபட்சமாக பாளையில் 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவி அருகே உள்ள கன்னடியன்கால்வாய் பகுதியிலும் சூறாவளி காற்றுடன், 22 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.

மணிமுத்தாறு, நெல்லை டவுன் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் நேற்று சங்கரன்கோவில் பகுதியில் மட்டும் 3 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் நேற்று மாலை 7 மி.மீட்டர் அளவிலும், கழுகுமலையில் 1.5 மி.மீட்டரிலும், விளாத்தி குளத்தில் 1 மி.மீட்டரிலும் மழை பெய்தது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 83 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை நீர்மட்டம் 105.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.54 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 8 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டு உள்ளது. அணையில் தற்போது 92.60 அடி நீர்மட்டம் உள்ளது.

அணைகளில் போதிய நீர்மட்டம் உள்ளதால் முன் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News