செய்திகள்
கோப்பு படம்

வங்காளதேசத்தினருக்கு போலி இந்திய அடையாள அட்டை தயாரித்துக்கொடுத்த 8 பேர் கைது

Published On 2020-12-14 11:38 GMT   |   Update On 2020-12-14 11:38 GMT
வங்காளதேசத்தினருக்கு போலி இந்திய அடையாள அட்டை தயாரித்துக்கொடுத்த 8 பேரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை:

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. 

இதனால் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் பலர் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள மக்களோடு மக்களாக மறைந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களை கண்டுபிடிக்கும் வகையில் குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், குடியுரிமை திருத்தச்சட்டம் தற்போதுவரை அமல்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில், சட்டவிரோத வங்காளதேச குடியேறிகள் பலரும் இந்திய அடையாள அட்டையை போலியாக வைத்துள்ளது குறித்து பல்வேறு மாநிலங்களில் போலீசார் நடத்திவரும் விசாரணைகளில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு போலி அடையாள அட்டைகள் தயாரிக்கும் கும்பலை அவ்வப்போது போலீசார் கைது செய்தும் வருகின்றனர். 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சிலர் போலி இந்திய அடையாள அட்டைகளை தயாரித்து வங்காளதேசத்தினருக்கு வினியோகம் செய்வதாக அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்த தகவலையடுத்து, போலீசார் இன்று சந்தேகத்திற்குரிய நபர் தங்கி இருந்த வீட்டில் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் இந்திய அடையாள அட்டைகளான பான் கார்டு, ஆதார் கார்டுகளை சட்டவிரோதமாக தயாரிப்பது தெரியவந்தது. 

மேலும், இந்திய அரசு முத்திரைகள் பலவும் கைப்பற்றப்பட்டது. வங்காளதேசத்தினர் இந்தியாவில் தங்குவதற்கு வகைசெய்யும் பாஸ்போர்டுகளையும் போலியாக தயாரித்துள்ளனர். அதன்மூலம் 80-க்கும் அதிகமான வங்காளதேசத்தினருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, இந்திய அடையாள அட்டைகளை தயாரித்த 4 வங்காளதேசத்தினர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags:    

Similar News