தொழில்நுட்பம்

வேற லெவலில் மாறும் கூகுள் சேவைகள் - கூகுள் IO2019 முக்கிய அறிவிப்புகள்

Published On 2019-05-08 02:48 GMT   |   Update On 2019-05-08 02:48 GMT
கூகுள் நிறுவனத்தின் IO2019 நிகழ்வில் அந்நிறுவன சேவைகளில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. #IO2019



கூகுள் நிறுவனத்தின் IO2019 டெவலப்பர் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கியது. இதில் கூகுள் நிறுவன சேவைகளான கூகுள் சர்ச், லென்ஸ் உள்ளிட்டவற்றில் விரைவில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதுமட்டுமின்றி கூகுளின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த முக்கிய தகவல்களும் அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில் கூகுள் சர்ச் செய்யும் போது கேமரா வழியே ஏ.ஆர். சார்ந்த பதில்கள், கூகுள் நியூஸ் சேவையில் பாட்காஸ்ட் சார்ந்த அறிவிப்புகள் உள்ளிட்டவை புதிதாக சேர்க்கப்படுகின்றன. இத்துடன் கூகுள் லென்ஸ் சேவையில் கட்டணம் செலுத்தும் வசதி, கூகுள் மென்பொருள் தானாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.



இனி பாட்கேஸ்ட்கள் நேரடியாக கூகுள் தேடல்களில் ஒன்றிணைக்கப்படுகிறது. இதன் மூலம் பயனர் விரும்பும் பாட்கேஸ்ட்களை எளிமையாக கண்டறிய முடியும். மேலும் பாட்கேஸ்ட்களை பின்னர் கேட்க சேமித்து வைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் கூகுள் சர்ச் செய்யும் போது ஏ.ஆர். சார்ந்த தகவல்கள் பதில்களாக பட்டியலிடப்படுகின்றன. இவை இம்மாத இறுதியில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென கூகுள் நாசா, நியூ பேலண்ஸ், சாம்சங், டார்கெட், விசிபிள் பாடி, வால்வோ மற்றும் வேஃபேர் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதன்மூலம் கூகுள் தேடல்களில் 3D பொருள்களை காண்பிக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் பயனர்கள் 3D பொருட்கள் மற்றும் ஏ.ஆர். அனுபவத்தை நேரடியாக பெற முடியும். இதனால் பயனர் தேடும் விவரங்களை மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.



கூகுள் லென்ஸ் சேவையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களை கொண்டு பயனர்கள் உணவகங்களில் கிடைக்கும் பிரபல உணவு வகைகளை பற்றி அறிந்து கொள்ள முடியும். மேலும் அந்த உணவு எவ்வாறு காட்சியளிக்கும் என்பதையும் பார்த்து தெரிந்து கொண்டு அவற்றுக்கு மற்றவர்கள் வழங்கியிருக்கும் விமர்சனங்களை படிக்கலாம். 

இவற்றுடன் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்களுக்கென கூகுள் கோ எனும் சர்ச் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதிலும் கேமரா வசதிகள் வழங்கப்படுகின்றன. இதை பயன்படுத்தி பயனர்கள் மிக எளிமையாக மொழி மாற்றம் செய்ய முடியும். மொழி தெரியாத அல்லது படிக்கத் தெரியாதவர்கள் எழுத்துக்களின் மேல் கூகுள் கேமராவை காண்பிக்க வேண்டும். இனி கூகுள் உங்களுக்கு திரையில் மொழி பெயர்ப்பு, வாசித்தல் போன்ற ஆப்ஷன்களை பட்டியலிடும். அவற்றை தேர்வு செய்தால் உடனடி மொழிமாற்றம் பெறுவதோடு, எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை கூகுள் கேமரா வாசித்துக் காட்டும்.
Tags:    

Similar News