செய்திகள்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-03-19 02:55 GMT   |   Update On 2021-03-19 02:55 GMT
சாத்தான்குளம் தந்தை-மகன் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று மதுரை கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த செல்வராணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது கணவர் ஜெயராஜ். எங்கள் மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரையும் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சில போலீஸ்காரர்கள் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எனது கணவரும், மகனும் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு உள்ளனர்.

படுகாயங்களுடன் அவர்கள் இறந்துவிட்டனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கைதான சாத்தான்குளம் போலீஸ்காரர்கள், இந்த வழக்கில் இருந்து விடுபட எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடலாம். பணபலம் காரணமாக சாட்சிகளை மிரட்டி, கலைக்க வாய்ப்பு உள்ளது.

எனவே மதுரை கோர்ட்டில் நிலுவையில் உள்ள என் கணவர் மற்றும் மகன் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து தீர்ப்பளிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து சி.பி.ஐ. தரப்பில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில், “இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ. முடித்து குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டது. இனி சம்பந்தப்பட்ட கோர்ட்டுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் கணவர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்கள் அனைவரும் போலீஸ்காரர்கள். எனவே அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுபடுவதற்கும், சாட்சிகளை கலைப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள். பணபலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தி இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

உதாரணமாக ஒரு நாள் சிறையிலிருந்து வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டில் மேற்கண்ட கைதிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், கோர்ட்டு வளாகத்திற்குள்ளேயே மறைவான இடத்தில் நின்றுகொண்டு வேறு ஒருவருடைய செல்போனை வாங்கி எதிர்முனையில் ஒருவரை மிரட்டி பேசினார். பணம் கேட்டு மிரட்டி பேசினார். அந்த பணத்தை கொண்டு அவர் இந்த வழக்கின் விசாரணையை திசை திருப்பவும் முயற்சிக்கலாம். இந்த வழக்கில் சாட்சிகளாக போலீஸ்காரர்கள்தான் பெருமளவு உள்ளனர். அவர்களை மிரட்டி தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல வைக்கலாம். எனவே இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்து தீர்ப்பு அளிக்கும்படி கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், “சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு முடிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News