செய்திகள்
கனிமொழி

தமிழ்நாட்டை டெல்லிக்கு அடகு வைத்து விட்டார்கள்- கனிமொழி பேச்சு

Published On 2021-03-30 07:41 GMT   |   Update On 2021-03-30 07:41 GMT
எட்டு வழிச்சாலை மட்டும் முதல்வர் பழனிசாமி போடுவார். அதில் தான் பணம் பார்க்க முடியும். தமிழகத்தில் அடிக்கல் நாயகன் எடப்பாடி பழனிசாமி.

சென்னை:

சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில், தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, திமுக கனிமொழி எம்.பி தேர்தல் பிரசாரம் செய்தார்.

தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி வரப்போகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக வரப்போகிறார். அ.தி.மு.க.ஆட்சியில், தமிழகம் முழுவதும் சாலை ஏதும் போடப்படவில்லை.

எட்டு வழிச்சாலை மட்டும் முதல்வர் பழனிசாமி போடுவார். அதில் தான் பணம் பார்க்க முடியும். தமிழகத்தில் அடிக்கல் நாயகன் எடப்பாடி பழனிசாமி.

அவர் அடிக்கல் மட்டும் நாட்டுகிறார். ஆனால் எந்த திட்டத்தையும் செயல்படுத்துவதில்லை.

தமிழ்நாட்டை டெல்லியில் அடகு வைத்து விட்டனர்.தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருத்தை திணிக்கிறார்கள். நம்ம வீட்டு பிள்ளைகள் படிக்க கூடாது என்று நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். தற்போது, புதிய கல்விக் கொள்கையை கொண்டு வரப்போகிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்காது. இந்த ஆட்சியால் யாருக்கும் பயன் இல்லை. ரே‌ஷன் கடைகளுக்கு சென்றால், கைரேகை வைக்க வேண்டும், பொருட்கள் இல்லை என்று சொல்கிறார்கள்.

ரே‌ஷன் பொருட்கள் வாங்கினால் நாம் வாங்கும் எடை சரியாக இருப்பதில்லை. அரிசி வாங்கினால் குப்பையில் தான் கொட்டவேண்டும். அந்த அளவிற்கு அரிசியின் தரம் உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை, சிலிண்டர் விலை நாளுக்கு நாள் விலையேறி கொண்டு இருக்கிறது.

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் முந்தைய முறை அளித்த வாக்குறுதியை கூட நிறைவேற்ற வில்லை.

மக்களை ஏமாற்றி பதவியில், ஆட்சியில் இருந்து விடலாம் என்று அதிமுக நினைக்கிறது.

நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் நம்முடைய மொழியை நாம் காப்பாற்ற வேண்டும்.

தமிழகத்தை தமிழ்நாட்டில் இருந்து தமிழன் ஆள வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நகர்ப்புற பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம், கல்வி கடன் ரத்து செய்யப்படும். 75 சதவீதம் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

பெண்களுக்கு மாதம் உரிமை தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். கருணாநிதி பிறந்தநாள் அன்று ரூ.4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

பெட்ரோல் டீசல், பால் விலை குறைக்கப்படும். சிலிண்டருக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும். படிக்கும் மாணவர்களுக்கு கைகணினி வழங்கப்படும்.

சென்னையில் சிதைந்து போன குடிசைமாற்று வாரிய குடியிருப்பு புதுப்பித்து தரப்படும்.

உடற்பயிற்சி கூடம், நூலகம், விளையாட்டு மைதானம், பூங்கா, ஆரம்ப சுகாதார மருத்துவமனை அமைக்கப்படும்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் எல்லாம் தாக்கப்படுகிறார்கள்.

சிலிண்டர், வாஷிங்மி‌ஷன் வரும் என்று சொல்லுவார்கள் ஆனால் வராது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்து இப்படிப்பட்ட வாக்குறுதிகளை சொல்கிறார்கள்.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

Tags:    

Similar News