செய்திகள்
அமைச்சர் வேலுமணி

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும்- அமைச்சர் வேலுமணி

Published On 2020-01-10 11:26 GMT   |   Update On 2020-01-10 11:26 GMT
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை:

கோவை ஆர்.எஸ்.புரம் லைட்ஹவுஸ் பகுதியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. ஆயிரம் மற்றும் விலையில்லா வேட்டி-சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

விழாவுக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ. ஆயிரமாக உயர்த்தி அறிவித்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள 9 லட்சத்து 70 ஆயிரத்து 609 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 14.59 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பும், குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ. ஆயிரம் வீதம் ரொக்கமாக ரூ. 97.06 கோடி மதிப்பிலும், விலையில்லா வேட்டி- சேலைகள் ரூ. 18.61 கோடி மதிப்பிலும் என மொத்தம் 129.69 கோடி மதிப்பிலான விலையில்லா பொங்கல் பொருட்கள் மற்றும் விலையில்லா வேட்டி- சேலைகள் வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசு பொருட்கள் வருகிற 12-ந் தேதி வரை வழங்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கு வருகிற 13-ந் தேதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு அனைத்து விதமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் எவ்வித தடங்கலின்றி பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீதம் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தொண்டாமுத்தூர் தொகுதியில் 100 சதவீதம் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி எல்லோருக்கும் பொதுவான முதல்-அமைச்சராக உள்ளார். அவரை யார் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் வகையில் எளிமையாக உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது-

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் வழங்கி இருக்கிறார். கோவை மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 130 கோடி பொங்கல் பரிசாக கொடுத்து இருக்கிறார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய ஆதரவு அ.தி.மு.க.விற்கு இருக்கும். கோவை மாவட்டம் ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன்,மாநகராட்சி துணை கமி‌ஷனர் பிரசன்ன ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பழனிசாமி, வருவாய் கோட்டாட்சியர் தனலிங்கம்,புறநகர் மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் மணிமேகலை, தொண்டாமுத்தூர் பகுதி அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News