செய்திகள்
ஓ. பன்னீர் செல்வம்- மு.க.ஸ்டாலின்

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று ஓ.பன்னீர்செல்வம்-மு.க.ஸ்டாலின் பிரசாரம்

Published On 2019-10-18 04:24 GMT   |   Update On 2019-10-18 04:24 GMT
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் இன்று போட்டி பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதியில் அ.தி.மு.க- தி.மு.க. உள்பட 12 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் அனைவரும் வீதி, வீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதுபோல் அரசியல் கட்சியினரும் அ.தி.மு.க-தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் விக்கிரவாண்டி தொகுதியில் ஆதரவு திரட்டினார். அதுபோல் துணை முதல்-அமைச்சரும் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

இறுதி கட்டமாக ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவர் மாலை 4 மணிக்கு தென்னமாதேவி, ஏழுசெம்பொன், கஞ்சனூர், நேமூர், சின்னதச்சூர், மேலக்கொந்தை ஆகிய கிராமங்களில் திறந்த வேனில் சென்று ஆதரவு திரட்டுகிறார்.

தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் கட்டமாக கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டார். மேலும் திண்ணை பிரசாரம் நடத்தி மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

அதேபோல் இன்றும், நாளையும் அவர் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார். டி.புதுப்பாளையம், ஆசூர், மேலக்கொந்தை, பனையபுரம், தொரவி, வாக்கூர், ராதாபுரம், சிந்தாமணி, திருவாமாத்தூர், ஒரத்தூர், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி ஆகிய கிராமங்களில் 2 நாட்களும் திறந்த வேனில் சென்று தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டு வேட்டை நடத்துகிறார்.

அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் இன்று போட்டி பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News