உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில்

வீரராகவ பெருமாள் கோவில் தேர் திருவிழா- தேர் செல்லும் வீதிகளில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-05-07 09:50 GMT   |   Update On 2022-05-07 09:50 GMT
வீரராகவ பெருமாள் கோவில் தேர் திருவிழாவையொட்டி அனைத்து துறை அலுவலர்களும் தேரடியில் அமைந்துள்ள தேரினை பார்வையிட்டு தேரின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று காலை சித்திரை மாதம் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7ம் நாள் வருகிற 12ந் தேதி 48 அடி உயரமும், 21 அடி அகலமும் 75 டன் எடை கொண்ட திருத்தேர் பவனி நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேரின் உச்சிப்பகுதி மேலே சென்ற மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உடல் கருகி இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து திருவள்ளூர் வீரராகவர் கோவில் சார்பில் தேர் திருவிழாவுக்கு அனுமதி கேட்டு் அனைத்து துறைகளிலும் விண்ணப்பித்திருந்தனர்.

இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் கோட்டாட்சியர் முன்னிலையில் காவல்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரஹாசன், இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் ராஜ்கமல், நகராட்சி ஆணையர் பொறுப்பு கோவிந்த ராஜ், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் இளங்கோவன், பிஎஸ்என்எல் உதவி பொறியாளர் கண்ணன், மின்சார துறை உதவி செயற்பொறியாளர் குமார் உதவி பொறியாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் வீரராகவர் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களும் தேரடியில் அமைந்துள்ள தேரினை பார்வையிட்டு தேரின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து தேர் செல்லும் முக்கிய சாலையான பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு உள்ளிட்ட தெருக்களில் ஆக்கிரமிப்பை அகற்றி, தேர் செல்ல இடையூறாக உள்ள மின் வயர்களை அகற்றி, சாலை வசதி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News