செய்திகள்
கைது செய்யப்பட்ட கெவின் பட்டேலையும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்

ரூ.25¼ லட்சம் புகையிலை பொருட்களுடன் ராஜஸ்தான் வாலிபர் கைது

Published On 2021-04-14 01:22 GMT   |   Update On 2021-04-14 01:22 GMT
திருப்பூரில் குடோனில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 1¼ டன் எடை கொண்ட ரூ.25 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அனுப்பர்பாளையம்:

திருப்பூரில் குடோனில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 1¼ டன் எடை கொண்ட ரூ.25 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த ஜி.என்.கார்டன் பகுதியில் உள்ள ஒரு குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட குடோனை சுற்றி வளைத்தனர். பின்னர் அதிரடியாக உள்ளே சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினார்கள்.



அப்போது மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கெவின் பட்டேல் (வயது 33) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் நெருப்பெரிச்சல் பகுதியில் தங்கி, குடோனில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து கெவின் பட்டேலை கைது செய்த போலீசார், அவரை திருப்பூர் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.25 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 1,274 கிலோ புகையிலை பொருட்களையும், ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் குடோனில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News